கடந்த சில நாட்களாக அண்ணா அறிவாலயத்தை விட இளைஞரணித் தலைமையகமான அன்பகத்தில் கூடுதல் பரபரப்பாக காணப்படுகிறது. தி.மு.க இளைஞரணிச் செயலாளராக நியமிக்கப்பட்ட உதயநிதி, தொடர்ந்து அன்பகத்துக்கு வருகிறார். அவரை வாழ்த்தி மகிழ, தமிழகம் முழுக்க இருந்து இளைஞரணி நிர்வாகிகள் படையெடுத்து வருகிறார்கள்.
இளைஞரணியினர் மட்டுமல்லாது கட்சியின் அனைத்து அணிகளையும் சார்ந்த பொறுப்பாளர்களும் உதயநிதியை சந்திக்க வேண்டும் என மேலே இருந்து உத்தரவு போனதால், மாவட்டங்களின் நிர்வாகிகளும் அன்பகத்தை முற்றுகையிட்டார்கள்.
கட்சியில் எத்தனையோ அணிகள் இருந்தும் இளைஞரணிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தா எப்படி? மற்ற அணிகளையும் பலப்படுத்தினால்தானே கட்சியின் வாக்கு வங்கி பரவலா ஸ்ட்ராங் ஆகும்ன்னு சீனியர்கள் தரப்பில் இருந்து முணுமுணுப்பும் கேட்குது. அவங்க தரப்பில் அதிர்ச்சி தெரியுது.
தன்னை சந்திக்கும் நிர்வாகிகளிடம் அங்கங்கே உள்ள கட்சியின் நிலவரம் குறித்தும் பிரச்சினைகள் குறித்தும் அவர்களிடம் உதயநிதி விவாதிக்கிறாராம். பொறுப்புக்கு வந்த வேகத்திலேயே, சில அதிரடி நடவடிக்கைகளையும் தொடங்கியிருக்கிறார்.
ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் முறையாக அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், ''மதுரை தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளராக பணியாற்றி வந்த ரா.பாலாஜி, மாவட்ட துணைச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதால், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பொறுப்பில் இருந்துவிடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளராக பணியாற்றி வரும் பா.மதன்குமார் மதுரை தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளராக நியமிக்கப்படுகிறார்'' என்று கடந்த 08.07.2019 உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். அவருடைய இந்த அதிரடி ஆக்ஷன்கள் மேலும் தொடர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இளைஞரணியினர் மத்தியில் அதிகமாவே இருக்கு.