பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு மக்கள் சென்று வருவது வழக்கம். பொங்கல் விடுமுறையை ஒட்டி அரசு சார்பில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இருப்பினும் ஆம்னி பேருந்துகள் சில கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக ஒவ்வொரு ஆண்டும் புகார்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளை கண்காணிக்க 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விதிமீறல்களில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகள் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு விதி மீறலில் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளை சிறைபிடிக்கவும் அதிகாரிகளுக்கு போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
விதிமீறல்களில் ஈடுபடுதல்; அதிக கட்டணம் வசூலித்தல்; வரி நிலுவை; பர்மிட் இல்லாமல் ஆம்னி பேருந்துகளை இயக்குவது போன்றவற்றை கண்காணிக்க 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மூன்று பேர் கொண்ட 30 குழுக்கள் அடுத்த வாரம் முதல் இது தொடர்பான சோதனையைத் தொடங்குவர் எனவும் போக்குவரத்து ஆணையரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.