விழுப்புரம் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு 03-01-25 அன்று தொடங்கியது 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், எம்.பிக்கள் சு.வெங்கடேசன், சச்சிதானந்தம், எம்.எல்.ஏக்கள் நாகை மாலி, சின்னத்துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், “தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலையை முதல்வர் பிரகடனம் செய்துவிட்டாரா?. தமிழகத்தில் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுப்பது ஏன்? சீப்பை மறைத்து வைத்தால் திருமணத்தை நிறுத்திவிடலாம் என நினைக்க வேண்டாம். விவசாயிகள், தொழிலாளர்களுக்கு எதிராக திமுக அரசு செயல்பட்டால் போராடுவோம்” என்று பேசி இருந்தார்.
இந்நிலையில் கே.பாலகிருஷ்ணனின் பேச்சை திமுகவின் நாளேடான முரசொலி விமர்சித்து கட்டுரை வெளியிட்டுள்ளது. 'இது தோழமைக்கு இலக்கணம் அல்ல' என்ற தலைப்பில் வெளியான அந்த கட்டுரையில், 'விழுப்புரம் மாநாட்டில் கே.பாலகிருஷ்ணன் வெளிச்ச விதைகளை விதைக்கவில்லை. எதிரிகளோடு சேர்ந்து கொண்டு எடுத்து எடுத்து பேசினால் தான் கவனம் கிடைக்கும் என்ற நோக்கத்தோடு அளிக்கப்படும் பேட்டிகளும் பேச்சுக்களும் மீடியாக்களின் மூலமாக ஏற்படுத்தும் பின் விளைவுகளை பற்றிக் கவலைப்படாமல் கருத்துச் சொல்லிக் கொண்டு போவது தோழமைக்கான இலக்கணம் அல்ல. தோழமையை சிதைக்கும் என்பதை பல்லாண்டு காலம் அனுபவம் கொண்ட தோழர் உணராமல் இருப்பது வருத்தமளிக்கிறது.
கே.பாலகிருஷ்ணன் விழுப்புரம் மாநாட்டில் வெளிச்ச விதைகளை விதைக்கவில்லை. வாய்க்கு வந்ததை சொல்ல கிடைக்கும் முக்கியத்துவம் குற்றச்சாட்டுக்கான அழுத்தம் அல்ல. திமுக சார்பில் வரிக்கு வரி பதில் அளிப்பதில்லை. விமர்சிப்பதற்கு உரிமை அவருக்கு உள்ளது. அவசர நிலை என்றால் என்ன என்று தெரியாத நிலையிலா அவர் இருக்கிறார். முதல்வரை தொடர்பு கொள்ளும் நிலையில் இருப்பவர் எதற்காக வீதியில் நின்று கேட்க வேண்டும்? திமுக ஆட்சிக்கு எதிரான சதி கூட்டத்திற்கு தீனி போடத் தொடங்கி இருக்கிறார் கே.பாலகிருஷ்ணன்'' என விமர்சித்துள்ளது.