சென்னையில், பட்ட பகலில் பேருந்துக்குள் மாணவர்கள் கத்தியை வைத்து தாக்கிக்கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மதியம் பிராட்வேயில் இருந்து பூந்தமல்லியை நோக்கி சென்ற பேருந்தில் பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் பயணித்தனர். அப்போது அவர்களுக்குள் 'ரூட்டு தல' தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த ஒரு தரப்பை சேர்ந்த மாணவர்கள், பட்டாக் கத்திகளை கொண்டு எதிர் தரப்பினரை சரமாரியாக தாக்க தொடங்கினர். பேருந்தில் அமர்ந்துகொண்டு சகஜமாக பேசிக்கொண்டு வந்த மாணவர்கள் திடீர் என்று அரிவாள், பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சாலையில் அங்கும் இங்கும் ஓடியதால் பேருந்தில் பயணித்த பொதுமக்கள் பீதி அடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. தற்போது அதுதொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் வெளியாகி தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த மாதிரியான சம்பவங்கள் நேற்று மட்டும் நடத்த ஒன்று அல்ல.
சில மாதங்களுக்கு முன்பு அம்பத்தூர் அருகே பட்டறைவாக்கம் ரயில் நிலையத்தில், கல்லூரி மாணவர்கள் கத்தி மற்றும் இரும்பு ராடுகளை வைத்து ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்ட சம்பவத்தின் வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வாறு, சில கல்லூரி மாணவர்கள் பொதுமக்களின் உயிரை மதிக்காமல் அத்துமீறி தங்களுக்குள் தாக்கி கொள்ளும் சம்பவம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. 'படிக்க' அனுப்பும் மாணவர்கள் 'அடிக்க' கற்றுக்கொள்வதற்கு என்ன காரணம் என்று அறிந்து கொள்வது தற்போதைய சூழ்நிலையில் கட்டாயமாகிறது. மேலும் சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் கல்லூரி மாணவர்கள் நடத்திய 'பஸ் டே' நிகழ்ச்சியின் போது, ஓட்டுநர் திடீர் என்று பிரேக் போட்டதன் காரணமாக, பேருந்தின் மேல் அமர்ந்திருந்த அனைவரும் தலைக்குப்புற கவிழ்ந்தனர். இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள்.
இந்நிலையில், நேற்றைய சம்பவம் தொடர்பாக இதுவரை இரண்டு மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், இதுதொடர்பாக பேட்டியளித்த பச்சையப்பா கல்லூரி முதல்வர், " குடும்ப சூழ்நிலைகள் காரணமாகவே மாணவர்கள் இத்தகைய வன்முறை சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள் என்றும், கல்லூரிக்கு யாரும் கத்தியுடன் வருவதில்லை" என்றும் தெரிவித்துள்ளார். அவர் சொல்வது போல குடும்ப சூழ்நிலையே வன்முறைக்கு காரணம் என்றால், அந்த வன்முறை அவர்களின் வீட்டில் தானே நடக்க வேண்டும். அது ஏன் ரோட்டில் நடக்கிறது என்ற கேள்வி இயல்பாகவே அனைவருக்கும் எழும். மேலும், வன்முறை, கொலை, கொள்ளை செய்து சிறைச்சாலைகளில் இருக்கும் ரவுடிகள் கூட தங்களுக்குள் வன்முறையில் ஈடுபட்டதாக எந்த ஒரு செய்தியும் இதுவரையில் தமிழகத்தில் நடந்ததாக தெரியவில்லை.
வன்முறை எண்ணம் தலைக்கேறி, குற்றம் செய்த ரவுடிகளிடம் கூட இல்லாத ஒரு வன்முறை வெறியாட்டம் படிக்கும் மாணவர்களிடம் வந்ததே ஒரு பெரிய ஆபத்தாக, எதிர்கால தமிழகத்தை அழிக்கும் விஷச்செடியாக மாறியுள்ளது. அந்த செடியை முழுவதும் கிள்ளி எறியாமல், மன்னிப்பு என்ற பெயரில் அவர்களை சஸ்பெண்ட் செய்துவிட்டு மீண்டும் கல்லூரியில் சேர்ப்பதை அறவே தவிர்க்க வேண்டும். 'சஸ்பெண்ட்' செய்வதை தவிர வேறு எதையும் செய்யமாட்டார்கள் என்ற எண்ணம், இந்த மாதிரி குற்றம் செய்யும் மாணவர்கள் மத்தியில் அழுத்தமாக பதிந்துள்ளதே இத்தகைய ஆபத்துக்களுக்கு காரணமாகிறது. எனவே, இத்தகைய குற்றச்செயலில் ஈடுபடும் மாணவர்களை நிரந்தர நீக்கம் செய்து அவர்கள் அதற்கு மேல் படிக்க முடியாது என்ற நிலையை ஏற்படுத்தினால் மட்டுமே, இத்தகைய சம்பவங்களின் எண்ணிக்கை குறையும் என்று பொதுமக்கள் தங்களின் ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்கள்.