ஈரான் அதிபர் பயணம் செய்த விமானம் விபத்தில் சிக்கி உள்ளது. விமானத்தை அந்நாட்டு ராணுவம் தேடிவருகிறது. ஈரான் – அஜர்பைஜான் நாடுகளுக்கு இடையே அரஸ் ஆறு பாய்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே மின்சார தேவைக்காக இருநாடுகளும் இணைந்து அணை கட்டுகின்றன. ஏற்கெனவே இரண்டு அணைகள் கட்டப்பட்டுள்ள நிலையில் மூன்றாவதாக கட்டப்பட்ட கிஸ் கலாசி மற்றும் கோடாஃபரின் அணைகளைத் திறக்கும் நிகழ்ச்சியில் இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி - அஜர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் இருவரும் திறக்க முடிவாகியிருந்தது. இதற்காக மே 19 ஆம் தேதி அஜர்பைஜானுக்கு ஈரான் அதிபர், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லா ஆகியோர் சென்றிருந்தனர்.
அணை திறப்புவிழா நிகழ்ச்சி முடிந்தபின் ஈரான் அதிபரின் விமானத்தில் அதிபர், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் இரானின் வடகிழக்கு நகரான தப்ரிஸுக்குச் விமானத்தில் சென்றுக்கொண்டிருந்தனர். அந்த நகரை அடைய 50 கி.மீ இருந்தநிலையில் வர்செகான் நகருக்கு அருகே விமானத்தின் சிக்னல் கட்டாகியுள்ளது. இந்த இடம் ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் இருந்து வடமேற்கே சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில் அஜர்பைஜான் தேசத்தின் எல்லையில் உள்ளது. அதன் பிறகு ஹெலிகாப்டர் திடீரென மாயமானது.
இதனையடுத்து, ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியிருக்கலாம் இருநாட்டு ராணுவ விமானங்களும் அதிபரின் விமானத்தை தேடத்துவங்கின. அது மலை மற்றும் மரங்கள் நிறைந்த அந்தப் பகுதி என்பதோடு 5 மீட்டர் தொலைவு வரை மட்டுமே வெறும் கண்களால் பார்க்க முடியும் நிலையில் பனி அதிகளவில் பெய்ததால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டது. விபத்துக்குள்ளான விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த மீட்புப் பணியாளர்கள் 3 பேர் காணாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது, அவர்களையும் சேர்த்து தேடிவருவதாக கூறப்படுகிறது. 15 மணி நேரத்திற்கும் மேலாக தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்ற நிலையில் ஈரானின் கிழக்கு அசர்பைஜான் மாகாணம் தப்ரிஸ் நகர் டவில் கிராமம் அருகே உள்ள மலைப்பகுதியில் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது கண்டுப்பிடிக்கப்பட்டது. மேலும் யாரும் உயிர் பிழைப்பதற்கு வாய்பே இல்லை என்பதால் ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி உயிரிழந்ததாக ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
63 வயதான இப்ராஹிம் ரைசி, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தவர். இவர் பணியில் இருந்தபோது ஈரான் – ஈராக் இடையிலான போரின் போது ஈரானால் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் ஆயிரக்கணக்கானவர்களை தூக்கிலிட உத்தரவிட்டு நிறைவேற்றியதன் மூலம் உலகம் முழுவதும் அறியப்பட்டவர். 2017 தேர்தலில் தோல்வியுற்றவர், 2021ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றார்.
கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் வழியாக தாக்குதல் நடத்தின. இந்த நேரடி மோதலால் முதலில் நிலைக்குலைந்த இஸ்ரேல் அதன்பின் நடத்திய பதில் தாக்குதலில் 300க்கும் மேற்பட்ட ஈரானிய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைத் தாக்கி அழித்துள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா இயங்கிவருகிறது. அமெரிக்காவின் ஆதரவு நாடுகளான ஜோர்டன், சௌதி அரேபியா போன்றவையும் ஈரானுக்கு எதிராக உள்ளன. இஸ்ரேல் இராணுவம், ஈரானின் அணுமின் நிலையங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி தருவதற்கு ஈரான் தயாராகியிருந்த நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது.
இது விபத்தா? திட்டமிட்ட செயலா என்பதுக்குறித்து விசாரணை நடத்த துவங்கியுள்ளது ஈரான்.