2019 ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது.
சர்வதேச அளவில் வறுமையை ஒழிக்கும் திட்டங்களை வகுத்ததற்காக 3 பேருக்கு இந்த பரிசு வழங்கப்பட உள்ளது. இதில் குறிப்பாக இந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜி மற்றும் அவரது மனைவி எஸ்தர் ஆகியோர் இந்த விருதை பெறுகின்றனர். இவர்களுக்கு இந்தியர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், மசசூட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் நேற்று நிருபர்களுக்கு அபிஜித் பானர்ஜி அளித்த பேட்டியில் இந்தியாவின் பொருளாதாரம் குறித்து பேசினார். அப்போது பேசிய அவர், "இந்தியப் பொருளாதாரம் மோசமான நிலையில் சென்று வருகிறது. பொருளாதாரத்தில் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்பதை அரசு இப்போதுதான் உணர்கிறது.
எதிர்காலத்தில் இந்தியாவின் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்காக என்ன செய்யப்போகிறார்கள் என்பதைவிட, தற்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதே முக்கியம். பொருளாதாரம் குறித்து பல புள்ளிவிவரங்கள் இந்தியாவில் எடுக்கப்படுகிறது. ஆனால் தன்னால் எந்த புள்ளிவிவரங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லையோ அதனை தவறான புள்ளிவிவரங்கள் என்று கூறுகிறது அரசு. பொருளாதாரம் மிக வேகமாக சரிந்து வருகிறது. இதற்கு அரசு என்ன செய்ய போகிறது என்பது எனக்குத் தெரியாது.
இந்திய அரசு மிகப்பெரிய நிதிப் பற்றாக்குறையில் இருக்கிறது. பட்ஜெட் இலக்குகளையும், நிதி இலக்குகளையும் அடைய இந்திய அரசு முயற்சித்து வருகிறது. என்னைப் பொறுத்தவரை பொருளாதாரம் இப்படி இருக்கும் போது, நிதி நிலைத்தன்மை குறித்து அதிகம் கவலைப்படத் தேவையில்லை, தேவையைப் பற்றித்தான் கவலைப்பட வேண்டும். இப்போது இந்தியாவில் உள்ள மிக முக்கியமான பிரச்சினை தேவை (demand) குறைந்து வருவதுதான்" என தெரிவித்தார்.