திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கௌதமபுரியில் 400 ஆண்டுகள் பழமையான சதிக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, செயலாளர் ஞானகாளிமுத்து ஆகியோர் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்திலிருந்து பிரம்மதேசம் செல்லும் வழியில் கௌதமபுரி வண்டன் குளத்தின் கரையில் ஒரு சதிக்கல் இருப்பதை கள ஆய்வின் போது கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு கூறியதாவது,
இறந்துபோன கணவனுடன் அவன் மனைவியும் உடன்கட்டை ஏறி உயிர் துறந்த பின்பு அவர்களின் நினைவாக எடுக்கப்படும் நினைவுச் சின்னம் சதிக்கல் எனப்படுகிறது.
சதிக்கல் சிற்பத்தில் கணவனுடன் மனைவி இருப்பது போன்று அமைக்கப்பட்டிருக்கும். இப்பெண் சுமங்கலியாக இறந்தவள் என்பதைக் காட்ட கையை உயர்த்தி இருப்பது போன்றும், அதில் வளையல் உள்ளிட்ட அணிகலன்கள் அணிந்தவளாகவும் அவள் காணப்படுவாள்.
தீயில் பாய்ந்து உயிர் விடுவது போன்று சிற்பம் செதுக்கும் வழக்கம் இல்லை. இத்தகைய சதிக்கல் கோயில்களை மாலையீடு, மாலையடி, தீப்பாஞ்சம்மன், மாலைக்காரி, சீலைக்காரி என்றும் அழைப்பர். மாலை, சதி ஆகிய சொற்களுக்கு பெண் என்றும் பொருளுண்டு.
நாயக்க மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் கைம்பெண்களுக்கு பல இன்னல்கள் நேர்ந்தன. ஆனால் கணவனுடன் உடன்கட்டை ஏறி இறந்துபோன பெண்களை தெய்வமாக போற்றி வணங்கினர். எனவே கணவன் மீது கொண்ட அன்பினாலோ, கட்டாயத்தினாலோ பெண்கள் உடன்கட்டை ஏறியுள்ளனர். ராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி இறந்தபின் அவரின் 47 மனைவியரும் அவருடன் உடன்கட்டை ஏறியுள்ளனர். ராமநாதபுரம், சிவகங்கை,புதுக்கோட்டை பகுதி மன்னர்களின் அடக்கஸ்தலம் மாலையீடு எனப்படுகிறது.
கௌதமபுரி வண்டன் குளக்கரையில் உள்ள சதிக்கல் 2½ அடி உயரம் 1 அடி அகலம் உள்ளது. இதில் ஆண், பெண் இருவரின் அமர்ந்த நிலையிலான சிற்பங்கள் உள்ளன. ஆண் இடது கையையும், பெண் வலது கையையும் உயர்த்திக் கையில் எதையோ ஏந்திய நிலையில் உள்ளனர். இருவரும் மற்றொரு கையை தொடையில் வைத்துள்ளனர். கை மற்றும் மார்பில் அணிகலங்கள் அணிந்துள்ளனர்.
இருவரின் ஆடைகளும் அழகுற செதுக்கப்பட்டுள்ளன. தலையில் ஆணுக்கு உச்சியிலும், பெண்ணுக்கு இடது புறம் சரிந்த நிலையிலும் கொண்டை உள்ளது. பெண் கையில் வளையல் அணிந்துள்ளார். சிற்பம் கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. ஆண் பெண் இருவரும் நீண்ட காதுகளுடன் காணப்படுகின்றனர். சிற்பத்தின் மேல் தோரணம் அழகாக அமைக்கப்பட்டுள்ளது. திறந்த வெளியில் இருந்ததன் காரணமாக முகம் தேய்ந்துள்ளது.
தற்போதும் வழிபாட்டில் உள்ள இச்சதிக்கல்லை இப்பகுதி மக்கள் தீப்பாஞ்சம்மன் என அழைக்கிறார்கள். பிரம்மதேசத்தில் உள்ள வாணியர் சமுதாயத்தினர் இதை வழிபடுகிறார்கள். எண்ணெய் செக்கு இருந்த காலத்தில் தினமும் எண்ணெய்யால் அபிசேகம் செய்துள்ளனர்.கௌதமபுரியிலுள்ள மக்கள் கரையடி முனீஸ்வரர் கோயில் வழிபாட்டின் போது இதையும் வழிபடுகிறார்கள். இதன் அமைப்பைக்கொண்டு இது சுமார் 400 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.