வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஆசிரியர்களை மதியாது டிக் டாக் வீடியோக்கள் எடுத்து அட்டகாசம் செய்துவருகின்றனர்.
அரசு உதவி பெறும் பள்ளியான ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிலர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளியின் தலைமை ஆசிரியரான பாபு என்பவரை கத்தியால் குத்தி அதற்காக சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு சென்றனர். நீதிமன்றத்தின் உத்தரவு பெற்று இதே பள்ளியில் தற்போது 12-ம் வகுப்பு படித்து வரும் இந்த மாணவர்கள் வகுப்பில் எந்த ஆசிரியர்களையும் மதிக்காமல் செய்யும் அட்டகாசங்கள் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.
ஆசிரியர் இருக்கும்பொழுதே அலட்சியமாக நடனமாடுவது, மேஜை நகர்த்துவது என அடாவடித்தனங்களை செய்து அதனை வீடியோவாக எடுத்து டிக் டாக் வீடியோவாக எடுத்து கெத்து காட்டுவதாக வெளியிட்ட வீடியோக்கள் பெற்றோர்களிடமும் ஆசிரியர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அங்குள்ள தலைமை ஆசிரியரும் சரி மற்ற ஆசிரியர்களும் சரி உயிர் பயத்துடன் இருப்பதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியரும் தாக்கப்பட்டவருமான பாபு கூறுகையில், இது அரசு உதவிபெறும் பள்ளி நிர்வாகம் தான் பொறுப்பேற்க வேண்டும். அவங்கதான் முயற்சி எடுத்து இதற்கு ஒரு தீர்வு கொடுக்க வேண்டும். இதில் நான் தொடர்பு கொள்ள முடியாது ஏனென்றால் நான் ஏற்கனவே பாதிக்கப்பட்டவன் என்றார்.
பள்ளிச் சீருடையை கழட்டி தலையில் கட்டிக் கொள்ளும் அளவிற்கு இவர்களது அலப்பறை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பள்ளி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். சிறுவர்கள் ஆகிய மாணவர்களின் வாழ்க்கை வீணாகிவிடக் கூடாது என சட்டம் காட்டும் கருணையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, கொலை முயற்சி வழக்கில் சிக்கி உள்ளோம் என்ற எந்த ஒரு குற்ற உணர்வும் இல்லாமல் பள்ளி மாணவர்களின் இந்த செயல்கள் அனைத்து தரப்பிலும் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.