கடந்த 30.05.2018 அன்று கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள துறையூர் கிராமத்தில் பக்கத்து பக்கத்து வீடுகளில் உள்ளவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கிருஷ்ணமூர்த்தி என்பவரை கோவிந்தராஜ் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களான மகன் ராஜா, மகள் கோகிலா, மனைவி ஜானகி ஆகியோர் கல்லால் அடித்ததின் காரணமாக கிருஷ்ணமூர்த்தி படுகாயமடைந்தார். அதனை தொடர்ந்து விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டார்.
இதுகுறித்து பெண்ணாடம் காவல் நிலையத்தில் கிருஷ்ணமூர்த்தியின் மனைவி புகார் அளித்ததன் பேரில் கோவிந்தராஜ் குடும்பத்தினர் மீது கொலை வழக்கு பதியப்பட்டது. அந்த வழக்கு விசாரணை விருத்தாச்சலம் மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி இளவரசன், கோவிந்தராஜ் மற்றும் அவரது மகன் ராஜாவுக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்ததுடன், அவரது மனைவி ஜானகியை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
மேலும் மகள் கோகிலாவுக்கு 17 வயதே ஆவதால், இந்த வழக்கு தனியாக கடலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட கோவிந்தராஜ் மற்றும் அவரது மகன் ராஜா இருவரையும் காவல்துறையினர் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.