யோஷிஹைட் சுகா ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டின் பிரதமராக பதவியேற்ற ஷின்சோ அபே, பதவியேற்ற ஒரு ஆண்டில் உடல்நலக்கோளாறு காரணமாக பதவி விலகினார். அதன்பின்னர் மீண்டும், 2012 ஆம் ஆண்டு அந்நாட்டின் பிரதமராக அவர் பொறுப்பேற்றார். கடந்த எட்டு ஆண்டுகளாக அந்நாட்டின் பிரதமராக செயல்பட்டுவந்த அவர், சமீபகாலமாக பெருங்குடல் அழற்சி காரணமாக அதிகமாக அவதிப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி காரணமாக பதவி விலகுவதாக அபே அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதனையடுத்து, உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடான ஜப்பானின் பிரதமராக யார் பொறுப்பேற்பார் என்ற ஆர்வம் உலக நாடுகள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில், ஜப்பானின் புதிய பிரதமர் செப்டம்பர் 17 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்நிலையில், ஆளும் பரல் டெமாகிரடிக் கட்சியினர் நடத்திய வாக்கெடுப்பில் 71 வயதான யோஷிஹைட் சுகா ஆளுங்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் சுகா பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.