
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா (NASA) சார்பில், போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த 2024ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றனர். இந்த ஆய்வு திட்டத்தின் படி ஆய்வு நடத்திவிட்டு, ஜூன் 14ம் தேதி பூமிக்குத் திரும்பும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இவர்கள் பயணித்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக இருவரும் சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
சுமார் 6 மாதங்களுக்கும் மேலாக இருவரும் விண்வெளியில் தங்கி இருக்கின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் இருவரும் பூமிக்குத் திரும்புவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. அவர்களை மீட்க தொடர் முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் எந்த பலனும் அளிக்காமல் போனது. இதன் காரணமாக, விண்வெளி மையத்தில் சிக்கியிருக்கும் அவர்களை அழைத்து வர எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியை நாசா நாடியது. இதையடுத்து, மீட்பு பணிகள் தீவிரமடைந்தன. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர், ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தின் மூலம் வரும் மார்ச் 16ஆம் தேதி அழைத்து வரப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை ஸ்பேஸ் எக்ஸ் - டிராகன் - ‘க்ரூ’ 10 எனும் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்த ஹைட்ராலிக் இயந்திரத்தில் திடீரென்று தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஸ்பேஸ் எக்ஸ்- டிராகன்- ‘க்ரூ' 10 திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த கோளாறை சரிசெய்யும் பணியில் விண்வெளி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டால் இந்திய நேரப்படி நாளை (14-03-25) அதிகாலை 4.56 மணிக்கு ராக்கெட்டை விண்ணில் செலுத்த வாய்ப்பு உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.