ஆப்கானிஸ்தான் தாலிபன் இயக்கத்தின் தலைவர்களுடன் நடத்தவிருந்த அமைதி பேச்சுவார்த்தையை ரத்து செய்து விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலுக்கு தாலிபன் தீவிரவாத இயக்கத்தினர் பொறுப்பேற்றுள்ள நிலையில், அதன் விளைவாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேச்சுவார்த்தையை ரத்து செய்து அறிவித்துள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள டிரம்ப், தாலிபன் தீவிரவாத இயக்கத்தின் சில முக்கிய தலைவர்களுடன் தாம், கேம்ப் டேவிட்டில் ஞாயிற்றுக்கிழமை இரகசிய பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் ஆப்கானிஸ்தான் அதிபருடனும் தனியாக பேச்சுவார்த்தை நடத்த இருந்ததாகவும் கூறியுள்ளார். இதுபோன்ற முக்கியமான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள சமயத்தில், தாலிபன்கள் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறியிருக்கக் கூடாது எனவும், அமைதி உடன்படிக்கையில் இருந்து விலகுவதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.

பேச்சுவார்த்தை நடத்தி தங்கள் கோரிக்கைகளை முன் வைப்பதற்கான தகுதியை அவர்கள் இழந்துவிட்டனர் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில், அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் 18 ஆண்டுகளாக நடந்து வரும் போரிலிருந்து தன்னை விடுத்துவித்துக் கொள்ள அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக அமைதி உடன்படிக்கைக்கு முயற்சிகள் மேற்கொண்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.