
கனடா நாட்டு பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோவிற்கு எதிராக கூட்டணி கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதாக சில நாள்களுக்கு முன்பு அறிவித்தது. இது ஜஸ்டின் ட்ரூடோவுக்கு நெருக்கடி கொடுத்தது. இதற்கிடையில், அமெரிக்கா அதிபரான டொனால்ட் டிரம்ப் கனடாவை அமெரிக்காவுடன் இணைப்போம் என்ற ரீதியில் பேசி ஜஸ்டின் ட்ரூடோவிற்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தினார்.
நாடு முழுவதும் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு ஆதரவு நிலை சரிந்து வந்ததால், பிரதமர் பதவியிலிருந்தும் லிபரல் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்தும் ராஜினாமா செய்வதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார். அதனை தொடர்ந்து, கடந்த ஜனவரி 7ஆம் தேதி ஜஸ்டின் ட்ரூடோ தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதையடுத்து, அடுத்த பிரதமருக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த வாக்கெடுப்பில், 85.9% வாக்குகளை பெற்று மார்க் கார்னி என்பவர் பிரதமராகவும், லிபரல் கட்சியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில், மார்க் கார்னி கனடா நாட்டின் 24ஆவது பிரதமராக நேற்று பதவியேற்றுக் கொண்டார். இங்கிலாந்து மற்றும் கனடா மத்திய வங்கியின் முன்னாள் தலைவராக இருந்த மார்க் கார்னி, 2008 முதல் 2013 வரை கனடாவின் 8ஆவது ஆளுநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.