பல ஆண்டுகள் காதலித்த பின் திருமணம் செய்துகொண்ட ஜோடி ஒன்று, திருமணம் முடிந்த சிறிது நேரத்திலேயே சாலை விபத்தில் ஒன்றாக உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஹார்லி மோர்கன், ரிஹானன் பவ்டெரக்ஸ் இருவரும் பால்ய நண்பர்கள். குழந்தை பருவம் முதல் ஒன்றாக படித்த இவர்கள் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் படிப்பை முடித்த பிறகு இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர். அதன்படி படிப்பை முடிந்ததும் இருவரும் திருமணம் செய்துக்கொள்ள ஏற்பாடு செய்தனர்.
பெற்றோர்களின் சம்மதத்தோடு இவர்களின் திருமணம் டெக்ஸாசில் உள்ள ஆரன்ஞ் நகர் தேவாலயத்தில் நடந்துள்ளது. திருமணம் முடிந்த மகிழ்ச்சியோடு தேவாலயத்தை விட்டு வெளியே வந்த இவர்கள் தங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட காரில் ஏறியுள்ளனர். கார் நெடுஞ்சாலையில் நுழைந்த மறுகணமே திடீரென வந்த ஒரு கனரக லாரி இவர்கள் கார் மீது அதிவேகத்தில் மோதியுள்ளது.
இதில் கார் பல முறை தூக்கி எரியப்பட்டு குட்டிக்கரணம் அடித்து சாலையில் விழுந்து நொறுங்கியது. இதில் காருக்குள்ளே சிக்கி மணமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பல ஆண்டு காதலுக்கு பின் திருமணம் முடிந்த சில நிமிடங்களில் பெற்றோர் மற்றும் உறவினர் கண் எதிரில் விபத்தில் இருவர் உயிரும் போனது. அவர்கள் இருவருக்கும் வாழ்கையில் ஒன்றாக பயணிக்க திருமணம் செய்து வைத்த அதே பாதிரியாரே அவர்களது இறுதி சடங்கையையும் நடத்தி வைத்தார்.
கண் எதிரே விபத்தை நேரில் பார்த்த மோர்கனின் தாய், “ நான் எனது மகன் இறந்ததைத் என் கண் முன்னால் பார்த்தேன். என் மகனை காரிலிருந்து வெளியேற்ற நான் பெரிதும் முயற்சித்தேன். என் இரண்டு குழந்தைகளும் என் கண் எதிரிலேயே துடிதுடித்து உயிரிழப்பதை கண்டேன். அந்தக் காட்சி என் வாழ் நாள் முழுவதும் என்னை துயரில் தள்ளும்” என்று அழுதபடி தெரிவித்தார். திருமணம் முடிந்த சில நிமிடங்களிலேயே உயிரை விட்ட இந்த காதல் ஜோடிக்கு பலரும் சமூகவலைதளம் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.