கேரளாவிற்கு ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி அறிவிக்கவில்லை என இந்திய ஐக்கிய அரபு தூதர் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் வரலாறு காணாத கனமழை பெய்தது. கடவுளின் தேசம் என்று சொல்லப்பட்ட கேரள தேசம் நீரால் சூழப்பட்டது. மலைகளில் இருக்கும் மண் சரிந்து நிலச்சரிவு ஏற்பட்டது. இதுவரையில் 400-க்கும் மேற்பட்டவர்கள் பலி ஆகியுள்ளனர். 19,000கோடி வரையிலான நஷ்டம், சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். சுமார் 7 லட்சம்பேர் வீட்டை விட்டு வெளியேறி மீட்பு முகாம்களில் தங்கவைக்கப்படும் அளவிற்கு கேரளாவின் நிலை மாறியது.
பல்வேறு நாடுகள் கேரளாவிற்கு உதவி செய்ய முன்வந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் சுமார் 700 கோடி நிதி அளிப்பதாக செய்திகள் வெளியானது. அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது வின் சையத் 700 கோடி ரூபாய் கொடுக்க முன் வந்திருப்பதாகவும் இதுதொடர்பாக மோடியிடம் அவர் பேசியதாகவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்தியாவுக்கான ஐக்கிய அரபு தூதர் அகமது அல்பன்னா இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கேரளாவிற்கு 700 கோடி நிவாரணம் வழங்குவது குறித்து எந்த அறிவிப்பையும் எங்கள் நாடு அறிவிக்கவில்லை. கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதம் கணக்கிடப்பட்டபின் தங்கள் நாடு கொடுக்கும் நிவாரண தொகை பற்றி அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.