பாலஸ்தீனத்தில் இருந்து அகதிகளாக வெளியேறிய மக்களுக்கு உதவும் வகையில் இந்தியா ரூ.15 கோடி நிதியுதவி அளித்துள்ளது.
பாலஸ்தீனிய அகதிகளின் நலனுக்காக சில முக்கியத் திட்டங்களைசச் செயல்படுத்த உதவும்வண்ணம் ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி முகமைக்கு இந்தியா 2 மில்லியன் டாலர் உதவியை வழங்கியுள்ளது. சுகாதாரம், மருத்துவம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் அம்மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சரிசெய்யும் வகையில் இந்த நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீன அகதிகள் நலனுக்கான இந்தத் தொகையை இந்திய பிரதிநிதி சுனில் குமார் ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி முகமைக்கு வழங்கினார்.
இதுகுறித்து ஐ.நா.வின் நன்கொடையாளர் தொடர்புத் துறை தலைவர் மர்க் லஸ்ஸாய் கூறுகையில், ‘‘பாலஸ்தீன அகதிகள் நிவாரண நிதிக்கு இந்தியா வழங்கியிருக்கும் நன்கொடைக்கு ஐ.நா. சார்பில் இந்தியாவுக்குப் பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன். மேம்பாட்டுத் திட்டங்களில் ஐ.நா. எதிர்கொள்ளும் நிதி சவால்களை எதிர்கொள்ள இது உதவியாக இருக்கும்’’ என்று தெரிவித்தார்.