90ஸ் கிட்ஸ்க்கு பல சூப்பர் ஹீரோக்கள் உண்டு. அதில் முக்கியமான ஒருவர்தான் WWE மல்யுத்த விளையாட்டின் முன்னோடி வீரரான அண்டர்டேக்கர். சமீபத்தில் இவர் குறித்து வெளியான ஆவணப்படமான 'தி லாஸ்ட் ரைட்'டில் தனது ஓய்வு குறித்து மனம் திறந்திருக்கிறார் 'அண்டர்டேக்கர்' என்னும் மார்க் கால்வே.
55 வயதை கடந்துள்ள அண்டர்டேக்கர், பலராலும் 'டெட் மேன்' என்று அறியப்பட்டார். ஆம், சாவுக்கே சாவு பயத்தை காட்டியவர் என்பதை போலதான் 90ஸ் கிட்ஸ் இவரை பார்த்து வந்தனர். 'அண்டர்டேக்கருக்கு ஏழு உசுருடா' என்ற கதையை 90ஸ் கிட்ஸ் கண்மூடித்தனமாக நம்பியதற்கு முக்கிய காரணம் நெடுநெடுவென்ற உயரம், நீண்ட முடி, கருப்பு உடை என இருந்த இவருடைய மிரட்டல் தோற்றம்.
நியாயத்திற்காக சண்டை போடும் சினிமா ஹீரோ இறுதியில் வென்றுவிடுவார் என எவ்வளவு நம்பியிருப்போமோ அந்தளவிற்கு அண்டர்டேக்கர் சண்டை போட்டால் எதிராளி காலி என்பதை நம்பினார்கள். இவரைத் தொடர்ந்து இந்தப் போட்டியில் பல லெஜண்டுகள் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், அண்டர்டேக்கர் ஏற்படுத்திய அந்தத் தாக்கம் என்ன என்பது சிறு பிள்ளை பிராயத்திலிருந்து இந்த ஷோவை பார்ப்பவர்களுக்குப் புரியும். வளர்ந்த பிறகு இந்தப் போட்டியே பொய், இது ஒரு பித்தலாட்டம், நம்மை பார்க்க வைப்பதற்காக இவர்கள் அடிவாங்குகிறார்கள், அவர்கள் அடித்துக்கொள்வது உண்மை இல்லை என்பதை உணர்ந்த தருணத்திலும் கூட 'அண்டர்டேக்கருக்கு ஏழு உசுரு இல்லை' என்பதை நம்புவது பலருக்கு சிரமமாக இருந்தது.
அண்டர்டேக்கர் என்றாலே நம் நினைவுக்குள் அழகாக இருள் சேர்ந்துகொள்ளும், க்ரேவ் யார்ட் இசை டங் டங் என்னும் மணி ஓசையுடன் நம்மை அச்சப்படுத்தும், சிறுவயதில் பேய்ப்படம் என்றாலே குழந்தைகள் பயப்படுவார்கள். ஆனால், கண்ணை மூடிக்கொண்டு விரல் ஓட்டையில் பேயை பார்ப்பார்கள். அதுபோன்ற ஒரு அனுபவத்தை, வியப்பைதான் அண்டர்டேக்கரின் எண்ட்ரி நமக்கு ஏற்படுத்தியது. இன்னும் இதுபோல பல விஷயங்களை அண்டர்டேக்கர் ஏற்படுத்திய தாக்கம் என்று சொல்லலாம். மல்யுத்த வீரர் என்பதை தாண்டி சிறந்த நடிகராக இருந்தாரோ என்னவோ. இன்று உலக அளவில் பெரும் தொகையை சம்பளமாகப் பெறுவது இந்த ஷோவில் மல்யுத்த வீரராக இருந்து இப்போது ஹாலிவுட் நடிகராகிவிட்ட 'தி ராக்' என்னும் ட்வெயின் ஜான்சன்தான்.
அண்டர்டேக்கருக்கு ஏழு உயிர் என்னும் கதையை பேசிப் பேசி வியந்திருப்போம். ஆனால், தற்போது அண்டர்டேக்கருக்கு இதிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற எண்ணம் வந்ததற்கு அந்த உயிர்தான் காரணமாக இருக்கிறது. 'தி லாஸ்ட் ரைட்' ஆவணப்படத்தில், கடந்த ஆண்டு கோல்பெர்க்கிற்கும் அண்டர்டேக்கரும் நடைபெற்ற சண்டையில் கரணம் தப்பினால் மரணம் என்னும் அளவிற்கு உயிரை பிடித்துக்கொண்டு தப்பித்துள்ளார் இந்த டெட் மேன். ஆமாம், கோல்ட்பெர்க் அண்டர்டேக்கரை தூக்கி கீழே போடும்போது சுதாரித்துக்கொண்டிருக்கவில்லை என்றால் அண்டர்டேக்கரின் தலை தரையில் பட்டு சாவை பார்த்திருப்பார் என்று அவரே சொல்கிறார். சாவிற்கு மிக அருகில் சென்று வந்த அந்த மேட்ச்சிலிருந்துதான் ஓய்வு எடுக்கும் நேரம் வந்துவிட்டது என்பதை தான் உணர்ந்ததாகவும் தன் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை நிராதரவாக நிற்க விட மனம் வரவில்லை என்றும் எமோஷனலாக பேசியுள்ளார்.
கடந்த 30 வருடங்களாக மல்யுத்தத்தின் மூலம் ரசிகர்களை மிரள வைத்த அண்டர்டேக்கர், தற்போது சாவின் விழிம்பு வரை சென்று மீண்டும் ஒரு முறை பிறந்திருக்கிறார் என்பதை உணர்கையில் உண்மையிலேயே அண்டர்டேக்கருக்கு ஏழு உயிர் என்று இன்னும் 90ஸ் கிட்ஸ் மனம் நம்பிக்கொண்டே இருக்கிறது!