
நாகை மாவட்டம் விழுந்தமாவடி கிராமத்தைச் சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 33). இவர் அடிக்கடி போதைப் பொருள் கடத்தல்களில் ஈடுபட்டதாக வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனால் இவரைப் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்காணிப்பில் வைத்துள்ளனர். அதே சமயம் சென்னை (என்.சி.பி.) மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாரும் கடந்த 10 நாட்களுக்கு மேலாக அலெக்ஸ் செல்போன் மற்றும் நடமாட்டத்தைக் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் அலெக்ஸ் புதுக்கோட்டைப் பகுதிக்கு வந்திருப்பதை அறிந்து பின் தொடர்ந்து வந்துள்ளனர்.
கடந்த 13ஆம் தேதி புதுக்கோட்டை மேலவிலக்குடி கிராமத்தில் ஒரு இடத்தில் இருந்த அலெக்ஸை பிடித்த என்.சி.பி. போலீசார் சோதனை செய்துள்ளனர். அலெக்ஸை சோதனை செய்த என்சிபி போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அதாவது அலெக்ஸிடம் ரூ.8 கோடி மதிப்பிலான 95 கிராம் எடையுள்ள விலை உயர்ந்த வடமாநிலங்களில் அதிகம் பயன்பாட்டில் உள்ள மெத்தபெட்டமைன் போதைப் பொருள் மற்றும் ரூ.2 லட்சம் பணம் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அலெக்ஸை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த போதைப்பொருள் மற்றும் பணத்தையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
மேலும் அலெக்ஸிடம் நடத்திய விசாரணையில், இந்த மெத்தபெட்டமைன் போதைப் பொருள் வடமாநிலத்தில் இருந்து வாங்கி புதுக்கோட்டை, ராமநாதபுரம் கிழக்கு கடற்கரைப் பகுதியில் இருந்து இலங்கைக்குப் படகுகள் மூலம் கஞ்சா போன்ற போதைப் பொருள் கடத்திச் செல்வோர் மூலம் இலங்கைக்கு அனுப்பப் புதுக்கோட்டை வந்து தங்கியதாகக் கூறியுள்ளார். மேலும், கடத்தல் படகிற்குக் கொடுப்பதற்காகத் தான் இந்த பணம் கொண்டு வந்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து அந்த போதைப் பொருள் எங்கிருந்து அலெக்ஸ் வாங்கினார் என்ற விபரங்களைச் சேகரித்து அடுத்த இலக்கை நோக்கிச் செல்ல போலீசார் தயாராகி வருகின்றனர். தொடர்ந்து கிழக்கு கடற்கரை பகுதியில் கடத்தல்கள் அதிகரிப்பது தொடர்கதையாகிவிட்டது வேதனை அளிப்பதாகப் பொதுமக்கள் கூறுகின்றனர்.