இலங்கை அதிபர் தேர்தலில் பொதுஜன முன்னணியின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே தொடர்ந்து முன்னிலை.
இலங்கையில் 8-வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று (16/11/2019) நடந்தது. இதில் சுமார் 81.52% வாக்குகள் பதிவாகின. அதை தொடர்ந்து வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. அதிபர் தேர்தலில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 35 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
எனினும் இலங்கை பொதுஜன முன்னணி கட்சியை சேர்ந்த வேட்பாளரும், முன்னாள் ராணுவ அமைச்சருமான கோத்தபய ராஜபக்சே மற்றும் புதிய ஜனநாயக கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் முன்னணி நிலவரங்கள் வர தொடங்கியுள்ளன. அதில் இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே (28,02,737- 49.41%) முன்னிலையில் உள்ளார். புதிய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை (25,19,140- 44.41%) விட சுமார் 2,83,597 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான வடக்கு மாகாணத்தில் புதிய ஜனநாயக கட்சியின் வேட்பாளருக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளது. அதேபோல் சிங்களர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கோத்தபய ராஜபக்சே அதிக வாக்குகள் கிடைத்துள்ளது. காலை முதலே முன்னணி நிலவரங்கள் மாறிமாறி வருவதால் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்த தேர்தலில் சுமார் 1.50 கோடி மக்கள் வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே கோத்தபய ராஜபக்சேவின் வெற்றியை கொண்டாடுமாறு தொண்டர்களுக்கு பொதுஜன முன்னணி அழைப்பு.