அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன், துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் இருவரும் வெற்றியை நெருங்கிவரும் சூழலில், அமெரிக்காவின் பொருளாதார மேம்பாடு, கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த திட்டமிடல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பதை முடிவெடுக்கும் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. அமெரிக்க தேர்தல் முடிவுகளுக்காக உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் சூழலில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றிபெறுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்க 270 சபைவாக்குகள் தேவை என்ற சூழலில், ஜோ பைடன் 264 வாக்குகளையும், ட்ரம்ப் 214 வாக்குகளையும் பெற்றுள்ளனர். பெரும்பான்மைக்கு இன்னும் ஆறு சபைகளின் வாக்குகளே தேவை என்ற நிலையில், பென்சில்வேனியா, நெவேடா, ஜார்ஜியா உள்ளிட்ட தொகுதிகளில் ஜோ பைடனே முன்னிலையில் உள்ளார். எனவே ஜோ பைடனின் வெற்றி ஏறக்குறைய உறுதியான சூழலில், அமெரிக்காவின் பொருளாதார மேம்பாடு, கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த திட்டமிடல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
டெலாவேர் நகரில் தொற்றுநோய் தடுப்பு வல்லுநர்கள், மருத்துவ வல்லுநர்கள், பொருளாதார வல்லுநர்களுடன் ஜோ பைடனும், கமலா ஹாரிஸும் ஆலோசனை நடத்தினர். அதன்பின்பு செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ஜோ பைடன், "தேர்தலில் இறுதி முடிவுக்காக காத்திருக்கும்போது, நாங்கள் மக்கள் பணியாற்ற காத்திருக்கவில்லை என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். என்னுடைய அதிபர் பணியின் முதல் நாளிலிருந்தே, கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கிவிடுவேன் என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
லட்சக்கணக்கான மக்களை இழந்துவிட்டோம். கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் தோல்வி அடைந்துவிட்ட நிலையில் அதிலிருந்து மீண்டுவருவது குறித்து மருத்துவ வல்லுநர்களுடன் நானும், கமலா ஹாரிஸும் ஆலோசனை நடத்தினோம். அமெரிக்காவில் 2 கோடி மக்களுக்கும் அதிகமானோர் வேலையின்மையில் இருக்கிறார்கள். லட்சக்கணக்கான மக்கள் வீட்டுக்கு வாடகை தரமுடியாமலும், சாப்பிட வழியில்லாமலும் இருக்கிறார்கள். பொருளாதார மந்த நிலையிலிருந்து விரைவாக மீண்டுவருவதற்கான வழிகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.