புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ்-இ-முகமது இயக்க தலைவனான மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதாக ஐ.நா சபை அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இந்தியா, பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இதற்காக தொடர்ந்து முயற்சித்து வந்த நிலையில் சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இதற்கு முட்டுக்கட்டை போட்டு வந்தது. இந்நிலையில் செவ்வாயன்று ஐ.நா சபையில் இந்த தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் மசூத் அசாருக்கு எதிராக ஆயுதத்தடை, சர்வதேச பயணத்தடை, சொத்துக்கள் முடக்கம் போன்ற நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் மேற்கொள்ள வேண்டும் என ஐநா சபை வலியுறுத்தியது. இந்நிலையில் மசூத் அசாரின் சொத்துக்கள் அனைத்தையும் முடக்கி, அவர் நாட்டை வெளிநாடு செல்ல தடை விதித்து பாகிஸ்தான் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.