மனித உடல் உறுப்புகளின் திடீர் செயலிழப்புகள் மற்றும் விபத்துகளால் ஏற்படும் உறுப்பு செயல் இழப்புகளைத் தடுப்பதற்காக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இதயம் முதல் கல்லீரல் வரை, கண்கள் முதல் சிறுநீரகம் வரை என உடல் உறுப்புகள் மாற்றப்படுவது இப்பொழுது சர்வ சாதாரணம் முறையாக மாறி வருகிறது. குறிப்பாக அண்மை காலமாகவே மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டு தேவைப்படுவோருக்கு மாற்றி பொருத்தப்படுவது பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் வருங்காலத்தில் தலையையே மாற்றி வைத்துக் கொள்ளும் அறுவை சிகிச்சை முறை வரப்போவதாக ஒரு நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோ தற்பொழுது இணையவாசிகளால் சிலாகிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் நிறுவனமான 'பிரைன் பிரிட்ஜ்' என்ற நிறுவனம் வீடியோ ஒன்றை கடந்த மே 22ஆம் தேதி வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது மருத்துவ உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. காரணம் மனிதனின் உடலில் எத்தனை அமைப்புகள் இருந்தாலும் அடையாளம் காணப்படும் முக்கிய அமைப்பாக இருப்பது முகமும் தலையும்தான். அதனை மாற்றியமைக்கும் சிகிச்சைக்கான அந்த வீடியோதான் இந்த சிலாகிப்புக்குக் காரணம்.
'பிரைன் பிரிட்ஜ்' நிறுவனம் தொடர்ந்து தலைமாற்று அறுவை சிகிச்சைக்கான ஆய்வை மேற்கொண்டு வருகிறது. ரோபோக்களின் உதவியுடன் இந்த அறுவை சிகிச்சை எப்படி சாத்தியம் என்பது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. ஆட்டோனோமஸ் சர்ச்சிக்கல் ரோபோஸ் வகை ரோபோக்கள் ஒரு மனிதனின் உடலில் இருக்கும் தலையை மற்றொரு மனிதனுக்கு மாற்றும்படியாக அந்த வீடியோ அமைந்துள்ளது. இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது ஒருபுறம் இருந்தாலும் நரம்பியல் நோய்கள் உள்ளவர்கள் மற்றும் கேன்சர் உள்ளவர்களுக்கு மிகவும் பயன்படும் விதமாக இருக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மருத்துவ உலகில் இதுவும் ஒரு மைல் கல்லாக அமையுமா இல்லையா என்பது விரைவில் தெரியவரும் என்கின்றனர் மருத்துவ உலகினர். இந்த ஆய்வு ஒருவேளை வெற்றிகரமாக முடிந்தால் இன்னும் எட்டு வருடத்தில் தலைமாற்று அறுவை சிகிச்சை நடைமுறைக்கு வரும் என 'பிரைன் பிரிட்ஜ்' நிறுவனத்தின் தலைமைத் தெரிவித்துள்ளது மருத்துவ உலகிற்கு மிராக்கல் கொடுத்துள்ளது.