எபோலா வைரஸ் தாக்குதலால் கடந்த ஜூலை மாதத்திற்கு பிறகு ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டில் 600 பேர் உயிரிழந்துள்ளனர் என ஐ.நா சபை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐ.நா சபை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ''காங்கோவின் மத்தியப் பகுதிகளில் எபோலா வைரஸ் தாக்கம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஏற்பட்டது. இதில் 600 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 1,041 பேர் எபோலா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளது. தடுப்பூசிகள் மூலம் சுமார் 70,000 பேருக்கு மேல் இந்த நோய் பரவல் தடுக்கப்பட்டுள்ளது எனவும், தொடர்ந்து எபோலா வைரஸுக்கு எதிராக விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள், தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுவதாக காங்கோ அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஆப்பிரிக்கா நாடுகளில் ஏற்பட்ட எபோலா வைரஸ் தாக்குதலில் 11,000 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.