உலகின் பல்வேறு நாடுகளில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் கரோனா பாதிப்பு அதிகரிக்க ஒமிக்ரான் மிக முக்கிய காரணமாக இருந்துவருகிறது. இந்நிலையில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த உலகின் பல்வேறு நாடுகள் மூன்றாவது டோஸ் தடுப்பூசியை செலுத்திவருகின்றனர். மேலும், இந்தியா உள்ளிட்ட நாடுகள் மூன்றாவது டோஸ் தடுப்பூசியை செலுத்துவது குறித்து ஆலோசித்துவருகின்றனர்.
இந்நிலையில் இஸ்ரேல், நான்காவது டோஸ் தடுப்பூசியை செலுத்த முடிவு செய்துள்ளது. அந்த நாட்டு சுகாதாரத்துறையின் நிபுணர்குழு, ஐந்தாவது கரோனா அலைக்குத் தயாராகும் விதமாக, 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு நான்காவது டோஸ் தடுப்பூசியை செலுத்த பரிந்துரைத்துள்ளது.
இந்தப் பரிந்துரையை இஸ்ரேல் நாட்டு பிரதமரும் வரவேற்றுள்ளார். சுகாதார அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரல் ஒப்புதல் அளித்ததும் இந்தப் பரிந்துரைகள் அமலுக்கு வரவுள்ளன. மூன்றாவது டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்ட ஒருமாதத்தில் நான்காவது டோஸ் செலுத்திக்கொள்ளவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.