பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கும் சர்ச்சைகளும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. அந்த வகையில் கடந்த உலக கோப்பை போட்டியில் படுதோல்வி அடைந்த அந்த அணியின் மீது கடும் விமர்சனம் எழுந்தது. பயிற்சியாளர் ஆத்தரை மாற்ற வேண்டும் என்று அணி வீரர்கள் கோரிக்கை விடுத்தனர். எனவே அணியின் புதிய பயிற்சியாளராக மிஷ்பா உல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் உள்ளூர் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு கடும் உணவு கட்டுப்பாட்டை விதித்துள்ளார். இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பை போட்டியின்போது பாகிஸ்தான் வீரர்களின் உடல் தகுதி பற்றிய பிரச்னை எழுந்தது. இதையடுத்து இப்போதே உணவு கட்டுப்பாடுகளை, அவர் கொண்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதன்படி உள்ளூர் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு உணவு முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைதான் அவர்கள் சாப்பிட வேண்டும். அதில் பிரியாணி மற்றும் எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவு வகைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பார்பிகியூ உணவு வகைகள், பழங்கள் அதிகமாக சாப்பிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதே நடைமுறையை தேசிய அணிக்கும் கடைபிடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.