ஊழல் வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு பாகிஸ்தான் அரசு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக நவாஸ் ஷெரீப் பதவிவகித்தபோது, சொகுசு வாகனங்கள் வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையில், நவாஸ் ஷெரீப் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. லாகூரில் உள்ள கோட்லாக்பாத் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நவாஸ் ஷெரீப்புக்கு கடந்த ஆண்டு, அக்டோபர் 22 ஆம் தேதி திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து ஜாமீனில் வெளிவந்த அவர், லண்டனில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். ஜாமீன் காலம் முடிவடைந்த நிலையில், அவரை நாடு திரும்பி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் கெடு விதித்தது. ஆனால், அவர் மீண்டும் பாகிஸ்தான் திரும்பாத நிலையில், அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது பாகிஸ்தான். இந்நிலையில், நவாஷ் ஷெரீப்புக்கு பாகிஸ்தான் அரசு, கைது வாரண்ட் பிறப்பித்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.