கடந்த ஆண்டின் இறுதியில் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கரோனா வைரசானது இந்தாண்டின் தொடக்கத்தில் மெல்ல பரவத் தொடங்கி இன்று உலக நாடுகளை அச்சுறுத்தக் கூடிய ஒன்றாக உருவெடுத்துள்ளது. ஊரடங்கு உட்பட பல தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் இவ்வைரஸ் பரவலின் வேகத்தையோ, அதனால் ஏற்படும் மரணங்களையோ கட்டுப்படுத்த முடியவில்லை. பல நாடுகளில் இரவுபகலாக இதற்கு எதிரான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அவற்றுள் பல இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டன என்றும் இந்தாண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்றும் கூறப்படுகின்றன. இந்நிலையில் ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "தடுப்பு மருந்து சோதனை முயற்சியானது வெற்றி பெற்றால் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் கரோனா தடுப்பு மருந்து ஆஸ்திரேலிய மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும். அடுத்த ஆண்டில் தடுப்பு மருந்து கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலான ஒப்பந்தங்கள் மருந்து நிறுவனங்களுடன் போடப்பட்டுள்ளன. அந்த ஒப்பந்தப்படி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், குவின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் மூலம் 84.8 மில்லியன் டோஸ் தடுப்பு மருந்து விநியோகிக்கப்படும். இது முழுக்க மெல்போர்ன் நகரத்திலேயே உருவாக்கப்படும்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது சோதனையில் இருக்கும் இந்தத் தடுப்பு மருந்தானது இறுதிக் கட்டத்தை வெற்றிகரமாக எட்டி, கரோனாவுக்கு எதிராக வீரியமாகச் செயல்படும் என்பதில் எந்த உத்திரவாதமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.