கரோனா வைரஸ் பரவல் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் தொழில் சாம்ராஜ்யத்தைச் சற்றே அசைத்துப்பார்த்திருக்கும் நிலையில், அமெரிக்காவில் லாக்டவுனை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர ட்ரம்ப் முயன்று வருவது அவரது நிறுவனத்தின் லாபத்தை கணக்கில் கொண்டே என்று சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏழை நாடுகள், வளர்ந்த நாடுகள் என வேறுபாடின்றி அனைத்து நாடுகளையும் புரட்டி போட்டுள்ளது இந்த வைரஸ். அந்தவகையில் உலகளவில் கரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தைத் தாண்டியுள்ள சூழலில் அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 13,347 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அந்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68,203 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் அமெரிக்காவில் 1,027 ஆக உயர்ந்துள்ளது.
ஒருபுறம் அமெரிக்கா இப்படியான தீவிர பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள அதேநிலையில், அந்நாட்டின் அதிபரான ட்ரம்ப், விரைவில் தொழில் நிறுவனங்களை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், "லாக்டவுன் செய்வதற்காக இந்நாடு கட்டமைக்கப்படவில்லை" எனப் பேசினார். உலக நாடுகள் பலவும் கரோனா பீதியால் முடங்கியுள்ள சூழலில், அமெரிக்க அதிபரின் இந்த அவசரத்திற்குப் பின்னால், சொந்த வணிக நோக்கமும் அடங்கியுள்ளதாகச் சிலர் தெரிவிக்கின்றனர்.
கடந்த நிதியாண்டில் சுமார் 3,250 கோடி ரூபாய் வருமானம் ஈட்டிய ட்ரம்ப்பின் தொழில்கள் தற்போது கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. 2,200க்கும் மேற்பட்ட சொகுசு அறைகளைக் கொண்ட அவரது ஐந்து நட்சத்திர விடுதிகள் அமெரிக்கா மற்றும் கனடாவில் பெரும்பாலும் காலியாகவே உள்ளன. அதேபோல அமெரிக்கா, ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்தில் உள்ள அவரது கோல்ஃப் மைதானங்கள் மூடப்பட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளன. அதேபோல இந்தியா உட்பட உலகின் பல இடங்களில் உள்ள ரியல் எஸ்டேட் தொழில்களும் முடங்கியுள்ளது. இதன் காரணமாகதான், மக்களின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தி லாக்டவுனை முடிவுக்குக்கொண்டு வருவதில் ட்ரம்ப் அவசரப்பட்டு வருவதாக அவர் மீது ஒரு தரப்பினர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.