இந்தியத் தரப்பிலிருந்து துப்பாக்கிச் சூடு நடத்தினால், இந்தியா தாங்க முடியாத விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என குளோபல் டைம்ஸ் எனும் சீன பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே கடந்த ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் ஏற்பட்டது. அதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். சீன தரப்பில் சுமார் 40 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து பதட்டம் நீடித்து வருகிறது. உலகின் இரு பெரிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் என்பதால், இது குறித்தான சர்வதேச சமூகத்தின் கவனம் அதிகமானது. இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த சில உலக நாடுகளும் முன்வந்தன. பின் இருநாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட ராணுவ ரீதியான பேச்சுவார்த்தையில், எல்லையில் நிறுத்தியுள்ள ராணுவப்படையை அதிகரிக்க மாட்டோம் என இருநாடுகளும் முடிவுக்கு வந்தனர்.
இந்நிலையில், குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், "எல்லையில் ராணுவப்படையை அதிகரிக்க மாட்டோம் என்று கூறிய இந்தியா அதைப் பின்பற்றுவதாகத் தெரியவில்லை. இனி இந்தியத் தரப்பிலிருந்து துப்பாக்கிச் சூடு நடத்தினால் தாங்க முடியாத விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்" என கூறப்பட்டுள்ளது.