Skip to main content

நவல்னியிடம் விசாரணை நடத்த முயற்சிக்கும் ரஷ்யா...

Published on 12/09/2020 | Edited on 12/09/2020

 

russia plans to investigate navalny

 

 

அலெக்ஸி நவல்னிக்கு விஷம் வைக்கப்பட்டது தொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொள்ள ரஷ்ய போலீஸார் முயன்று வருகின்றனர். 

 

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரும், ஊழல் எதிர்ப்பு அறக்கட்டளையின் தலைவருமான நவல்னி ஆளும் புதின் அரசின் அரசாங்கத்தில் நடைபெற்று வரும் ஊழல்களை மக்கள் மத்தியில் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறார். இதனால் ஆளும்கட்சியின் மிக முக்கிய எதிர்ப்பாளராக பார்க்கப்படும் நவல்னிக்கும், ஆளுங்கட்சியினருக்கும் இடையே அடிக்கடி வார்த்தை மோதல்கள் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், நவல்னி கடந்த மாதம் சைபீரியாவிலிருந்து மாஸ்கோவிற்கு விமானத்தின் சென்று கொண்டிருந்தபோது, அவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. அதனால் விமானத்தை அவசரமாக தரையிறக்கியுள்ளனர்.

 

அவரது உடல்நிலை மிகவும் மோசமானதைத் தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு விமானத்தில் வழங்கப்பட்ட தேநீரில் விஷம் கலக்கப்பட்டிருப்பதாக அவரின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்திருப்பது ரஷ்ய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. விமானப்பயண நாளன்று காலை, அவர் தேநீர் மட்டும்தான் குடித்ததாகவும், வேண்டுமென்றே யாரோ அதில் விஷம் வைத்துள்ளதாகவும் அவரது செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

 

இதனிடையே நவல்னி கோமா நிலைக்கு சென்றதால், அவரை வெளிநாட்டிற்குக் கொண்டுசென்று சிகிச்சையளிக்க வேண்டும் என அவரது கட்சியினர் கேட்டனர். ஆனால் அதற்கான அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாட்டின் தலைவர்கள் தலையிட்டு நவல்னியை ஜெர்மன் கொண்டுசெல்ல அனுமதி பெற்றனர். இதனையடுத்து அவருக்கு தற்போது ஜெர்மனியில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில், தொடர் சிகிச்சைக்கு பின்னர் நவல்னி, கோமா நிலையிலிருந்து மீண்டுள்ளதாக பெர்லின் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அவருக்கு விஷம் கொடுத்திருப்பதையும் ஜெர்மனி உறுதிசெய்தது. இந்நிலையில், அலெக்ஸி நவல்னிக்கு விஷம் வைக்கப்பட்டது தொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொள்ள ரஷ்ய போலீஸார் முயன்று வருகின்றனர். இதுகுறித்து ரஷ்ய போலீஸார் தரப்பில், “அலெக்ஸி நவல்னியிடம் விசாரணை நடந்த மருத்துவ அதிகாரிகளிடம் அனுமதி கேட்டுள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்