கரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்காவை, தற்போது மீண்டும் கரோனா அலை தாக்கியுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள கரோனா அலைக்கு ஒமிக்ரானே முக்கிய காரணமாக இருந்து வருகிறது. இந்தநிலையில் அந்தநாட்டில் ஒரேநாளில் 10 லட்சம் பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.
கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு ஒரேநாளில் 5 லட்சத்து 900 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது ஒரேநாளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா உறுதியாகியுள்ளது கவனிக்கத்தக்கது. ஒருநாட்டில் ஒரேநாளில் 10 லட்சம் பேருக்கு கரோனா உறுதியானதும் இதுவே முதல்முறையாகும். அமெரிக்காவில் தற்போது ஏற்பட்டுள்ள கரோனா அலையால், பெருமளவில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் பள்ளிகள், அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. மருத்துவமனைகள் நிரம்பி வழியத் தொடங்கியுள்ளன.
அமெரிக்கா நீங்கலாக ஒரேநாளில் அதிக கரோனா பாதிப்புகளை உறுதி செய்த நாடாக இந்தியா இருந்து வருகிறது. கடந்தாண்டு மே 7 ஆம் தேதி, இந்தியாவில் 4 லட்சத்து 14 பேருக்கு கரோனா உறுதியானது குறிப்பிடத்தக்கது.