கொலம்பியாவில் உள்ள அமேசான் வனப்பகுதியில் இருந்து தனி விமானத்தில் சன் ஜொஷி டி கவ்ரி நகருக்கு கடந்த 1 ஆம் தேதி ஒரு தம்பதியினர் அவர்களது 11 மாதக் குழந்தை உட்பட 4 குழந்தைகளுடன் பயணம் செய்தனர். இவர்கள் சென்ற விமானமானது அமேசான் வனப்பகுதிக்கு மேலே வான்வெளியில் பறந்தபோது விமானி தங்களது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்துள்ளார். அதன் பிறகு சிறிது நேரத்திலேயே விமானமானது, விமான நிலையத்துடன் தனது கட்டுப்பாட்டை இழந்தது.
இந்நிலையில் காணாமல் போன விமானத்தை தேடும் பணி நடைபெற்று வந்தது. மேலும் இந்த தேடுதல் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள், மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டனர். கடந்த 15 ஆம் தேதி விமானத்தின் சில பாகங்கள் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்ட தேடுதல் பணியில் விமானத்தில் பயணம் செய்த விமானி மற்றும் குழந்தைகளின் தாய் மற்றும் தந்தை ஆகிய மூவரின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
மேலும் இந்த விமானத்தில் பெற்றோருடன் பயணம் செய்த குழந்தைகள் பற்றிய விபரம் ஏதும் தெரியாத நிலையில் தொடர்ந்து தேடுதல் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் விபத்து நிகழ்ந்த 17வது நாளில் 11 மாத குழந்தை உள்பட 3 குழந்தைகளை ராணுவ வீரர்கள் கண்டுபிடித்துள்ளனர். குழந்தைகள் கடந்த 17 நாட்களாக வனப்பகுதியிலேயே சிறிய அளவில் அங்கு கிடைத்த பொருட்களைக் கொண்டு குடில் போன்று அமைத்து தங்கி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது இதுகுறித்து கொலம்பியா அதிபர் ட்விட்டரில், இந்த தேடுதல் முயற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்ததுடன், குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்சி என்று பதிவிட்டுள்ளார்.