கடந்த 1947 ஆம் ஆண்டு பாகிஸ்தான் பிரிவினையின் போது ஹைதராபாத் நிஜாம், பாகிஸ்தான் தூதரிடம் கொடுத்த ரூ.300 கோடி பாகிஸ்தானுக்கு சொந்தமில்லை என லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தியாவிலிருந்து கடந்த 1947-ம் ஆண்டு பாகிஸ்தான் பிரிக்கப்பட்டபோது இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ இணையப் போவதில்லை என ஹைதராபாத் மன்னர் மிர் உஸ்மான் அலி கான் அறிவித்தார். மேலும் ஹைதராபாத் மாகாணத்தை யாரவது கைப்பற்றிவிடுவார்கள் என அஞ்சிய அவர், பாதுகாப்புக்காக பிரிட்டனுக்கான பாகிஸ்தான் தூதர் ஹபிப் இப்ராகிமின் லண்டன் வங்கிக்கணக்கில், அப்போதைய மதிப்பில் சுமார் 9 கோடி ரூபாயை செலுத்தினார்.
பின்னர் ஹைதராபாத் மாகாணம் இந்தியாவுடன் இணைந்த பிறகு , 9 கோடி ரூபாயை திரும்ப ஒப்படைக்குமாறு லண்டன் வங்கியை மிர் உஸ்மான் அலி கேட்டுக்கொண்டார். ஆனால் பாகிஸ்தானின் அனுமதியின்றி பணத்தை தர முடியாது என மறுத்துவிட்டது லண்டன் வங்கி.
இந்த நிலையில் பணத்திற்கு பாகிஸ்தான் அரசு உரிமை கொண்டாடியதையடுத்து, கடந்த 2013 ஆம் ஆண்டு, மிர் உஸ்மான் அலியின் பேரன்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தற்போது தீர்பளித்துள்ள லண்டன் நீதிமன்றம், லண்டன் நாட்வெஸ்ட் வங்கியில் 300 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ள இந்த நிதி, நிசாமின் வாரிசுகளுக்கே சொந்தமானது என தெரிவித்துள்ளது.