உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 21 ஆவது நாளாகத் தொடர்ந்து வருகிறது. இந்தச் சூழலில், ரஷ்ய ராணுவத்தினரின் தாக்குதலால் கையை இழந்த ஒன்பது வயது சிறுமி ஒருவர், "அவர்கள் என்னைக் காயப்படுத்த நினைக்கவில்லை என்றும் நம்புகிறேன்" எனப் பேசியிருப்பது பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவ்வின் மேற்குப்பகுதியான ஹோஸ்டோமலில் வசித்து வந்த சாஷாவின் குடும்பத்தார் போரின்போது அங்கிருந்து தப்பித்து கார் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்துள்ளனர். சாஷாவின் தந்தை காரை ஒட்டிக்கொண்டிருந்த போது, அங்கு வந்த ரஷ்ய ராணுவத்தினர் காரின் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் சிறுமி சாஷாவின் தந்தை சம்பவ இடத்திலேயே கொல்லப்பட, ஒன்பது வயதுடைய சாஷா, அவரது சகோதரி மற்றும் தாய் அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளனர்.
அப்போது, சாஷாவின் கைகளை ரஷ்ய ராணுவத்தின் குண்டுகள் கடுமையாகச் சிதைத்துள்ளன. பின்னர், அருகிலிருந்த ஒரு மறைவிடத்திற்கு சாஷாவையும் அவரது சகோதரியையும் கொண்டு சென்றுள்ளார் அவர்களின் தாய். இரண்டு நாட்கள் மருத்துவ சிகிச்சை எதுவும் கிடைக்காமல் அந்த மறைவிடத்திலேயே பதுங்கியிருந்துள்ளார்கள் அந்த குடும்பத்தினர். அப்போது சிறுமி சுயநினைவை இழந்ததையடுத்து, அங்கிருந்த சிலர் வெள்ளைக் கொடிகளுடன் அந்த சிறுமியை ராணுவத்தினர் சுற்றி வளைத்திருந்த பகுதியின் வழியாக மருத்துவமனைக்குக் கொண்டுசென்றுள்ளனர்.
சிறுமியின் இடக்கை சிதைக்கப்பட்டிருந்ததாலும், அப்பகுதியில் செல்கள் இறந்து தொற்று ஏற்பட்டிருந்ததாலும் அவரது கையின் பெரும்பகுதியைத் துண்டிக்கும் நிலைக்கு மருத்துவர்கள் தள்ளப்பட்டனர். கை துண்டிக்கப்பட்டுக் குணமடைந்து வரும் சிறுமி, தன் மீதும் தன் குடும்பத்தினரின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து பேசுகையில், "எனது கையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. நான் எனது சகோதரியை அங்கிருந்து வேகமாக மறைந்து கொள்ளத் துரத்திக்கொண்டிருந்தேன். அப்போது என் அம்மா திடீரென கீழே விழுந்து விட்டார். உலகத்தில் எல்லாமே முடிந்துவிட்டது என நினைத்தேன். ஆனால் என் அம்மா சாகவில்லை. அவர் துப்பாக்கிச்சூட்டில் இருந்து மறைந்து கொண்டிருப்பது போலத் தெரிந்தது.
பின்னர் நான் சுயநினைவை இழந்தேன். யாரோ என்னைப் பாதாள அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு இருந்தவர்கள் எனக்கு உதவி செய்தனர். சிலர் என்னை ஒரு துண்டுடன் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். ரஷ்யர்கள் என்னை ஏன் சுட்டார்கள் என்று தெரியவில்லை. இது ஒரு விபத்து என்றும் அவர்கள் என்னை வேண்டுமென்றே காயப்படுத்த நினைத்திருக்க மாட்டார்கள் என்றும் நான் நம்புகிறேன்" என்று கூறியிருக்கிறார். ரஷ்யாவின் தாக்குதலால் தனது தந்தையையும் கையையும் இழந்த இந்த சிறுமியின் பேச்சு உலகம் முழுவதிலும் பலரையும் கண்ணீர்விட வைத்துள்ளது.
சிறுமி சாஷாவுக்கு சிகிச்சை அளித்த செவிலியர் சிறுமி குறித்து ஊடகம் ஒன்றிடம் கூறுகையில், "சுயநினைவு வந்ததும் சாஷா என்னிடம் சொன்ன முதல் விஷயம், ‘தயவுசெய்து உண்மையைச் சொல்லுங்கள். எனக்கு இடது கை இருக்கிறதா இல்லையா?’ என்பதுதான். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. எதுவும் சொல்லாமலிருப்பதா, பொய் சொல்லுவதா அல்லது அவளிடம் உண்மையைச் சொல்லுவதா என்று எனக்குத் தெரியவில்லை. வலியில் இருக்கும் ஒரு குழந்தை அதனைச் சகித்துக்கொண்டே ஆகவேண்டும் எனத் தெரிந்துகொண்டு கேட்கும் அந்த கேள்விக்கு என்ன பதில் சொல்ல முடியும்.
'நான் இனி ஆரோக்கியமாக இருப்பேனா..? பூக்கள் வரையப்பட்ட ஒரு புதிய பிங்க் செயற்கை கையை எனக்கு பொருத்த முடியுமா..?' என அவள் கேட்டாள். அவள் மிகவும் வலிமையானவள். அவள் அழுவதில்லை, ஏனென்றால் பலவீனமானவர்கள் மட்டுமே அழுவார்கள் என்பதை அவள் தெரிந்து வைத்திருக்கிறாள். குழந்தைகளைச் சுட்டுக் காயப்படுத்துபவர்களை நினைத்தால் நான் மிகவும் வெறுப்பாக உணர்கிறேன்" என்றார்.