பாகிஸ்தான் நாட்டின் லாகூர் நகரில் உள்ள அனார்கலி சந்தையில் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 20 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். முதல்கட்ட விசாரணையில், இரு சக்கர வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த டைம் பாம் (time bomb) வெடித்தது தெரியவந்துள்ளதாக லாகூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. அதேநேரத்தில் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்புக்கும், பாகிஸ்தான் அரசுக்கும் இடையேயான போர் நிறுத்தம் அண்மையில் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதலை தொடர்ந்து அனார்கலி சந்தை மூடப்பட்டு, அப்பகுதி முழுவதும் போலீஸாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.