வடகொரியா நாட்டில் அடிக்கடி இணைய சேவை முடங்கி வருகிறது. கடந்த மாதம் மட்டும் இரண்டு முறை வடகொரியாவின் இணைய சேவை முடங்கியது. இது எதனால் என தெரியாத நிலையில், அமெரிக்காவை சேர்ந்த, பி4எக்ஸ் என தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் ஹேக்கர் ஒருவர், தானே வடகொரியாவின் இணைய சேவையை அடிக்கடி முடக்குவதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு வடகொரிய உளவாளிகள், மேற்கத்திய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்களைக் குறி வைத்து சைபர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள பி4எக்ஸ், அதற்கு பழி வாங்கும் விதமாகவே வடகொரியாவின் இணைய சேவையை முடக்கி வருவதாக தெரிவித்துள்ளார்.
வயர்டு என்ற ஊடகத்திடம் வடகொரியாவின் இணைய சேவை முடக்கத்திற்கு பொறுப்பேற்றுள்ள பி4எக்ஸ் என்ற நபர், அதுதொடர்பாக ஸ்க்ரீன் ரெக்கார்டிங்ஸ்களையும் அந்த ஊடகத்திடம் வழங்கியுள்ளார். மேலும் வடகொரியா மீது சைபர் தாக்குதல் நடத்த டார்க் வெப்சைட் ஒன்றை ஆரம்பித்துள்ள அவர், அதற்கு ஹேக்கர்களை வேலைக்கு சேர்க்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.