
விருதுநகர் மாவட்டம் வத்ராயிருப்பு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்டது ரெங்கபாளையம். இந்த ஊரில் உள்ள பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் முருகேசன் ஆவர். இவர் தனது தந்தையான கணேசனை அதே கிராமத்தை சேர்ந்த தனது தங்கையின் கணவரான கார்த்திகைச்செல்வன் என்பவர் குடும்பப் பிரச்சனை காரணமாக கத்தியால் தாக்கி மிரட்டியுள்ளார். இதனைத் தட்டிக் கேட்டதால் கார்த்திகைச்செல்வன் முருகேசனைத் தாக்கி கொலை செய்தார்.
இந்த குற்றத்திற்காக கடந்த 2020ஆம் ஆண்டும் ஜூன் மாதம் 3ஆம் தேதி (03.06.2020) வத்ராயிருப்பு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு, திருவில்லிபுத்தூர், மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இவ்வழக்கில் இன்று (17.04.2025) திருவில்லிபுத்தூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் பொறுப்பு நீதிபதி பகவதி அம்மாள் குற்றம்சாட்டப்பட்ட கார்த்திகைச் செல்வனை குற்றவாளி என அறிவித்துள்ளார். அதோடு அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.16 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது உரிய சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். அதே சமயம் மாவட்ட காவல்துறை சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு முறையாக நீதிமன்றத்தில் எதிரிகளுக்கு தண்டனைகள் கிடைக்கும் வரை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.