
தமிழக சட்டப்பேரவையில் 2025 - 2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி (14.03.2025) தாக்கல் செய்தார். இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. இதனையடுத்து வேளாண் பட்ஜெட்டை, வேளான் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கடந்த மார்ச் 15ஆம் தேதி (15.03.2025) தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து துறை ரீதியான மானியக் கோரிக்கை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (17.04.2025) மாலை 6 மணியளவில் 20வது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், முதல்வரின் தனிச் செயலாளர்கள் மற்றும் துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்குதல், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குதல் மற்றும் மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்திடத்திட அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த அமைச்சரவை கூட்டத்தில் தொழில் துறை சார்பாக முக்கிய அனுமதி தரப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிய தொழில்களில் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை கூட்டத்தின் போது ரூ.10 ஆயிரம் கோடிக்கு முதலீட்டை ஈர்க்க இலக்கு நிர்னயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் தொழில் துறையில் முதலீடு பெறப்படும். தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. எனவே தமிழகத்தின் விண்வெளித் துறைக்கு இது பொன்னாள் ஆகும். ஏற்கெனவே உற்பத்தி துறையில் கவனம் செலுத்தும் நிலையில் தற்போது விண்வெளி துறையிலும் தமிழகம் கவனம் செலுத்த உள்ளது” எனத் தெரிவித்தார்.