கோவையில் வேடப்பட்டியில் திடீரென காட்டு யானை ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் பேரூர் அடுத்துள்ள வேடப்பட்டி, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே ஒற்றை காட்டு யானை ஒன்று திடீரென ஊருக்குள் புகுந்து அச்சுறுத்தி வருகிறது. அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் தோட்டங்களில் முகாமிட்டு பெரும் அச்சுறுத்தல் கொடுத்து வருகிறது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கரடிமடை பகுதிக்கு வந்த காட்டு யானை தாக்கியதில் நான்கு பேர் காயமடைந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை பேரூர் வேடப்பட்டி சாலை வழியாக ஒற்றை காட்டு யானை ஊருக்குள் புகுந்தது. சுமார் 20 கிலோமீட்டர் வனப்பகுதியில் இருந்து கடந்து வந்துள்ள காட்டு யானை தனியார் கல்லூரியின் பின்புறத்தில் முகாமிட்டுள்ளது.
காட்டு யானையை அந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்த கோவை வனச்சரக வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பாதுகாப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. காட்டு யானை சுற்றி வருவதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஒற்றைக் காட்டுயானை ஊருக்குள் புகுந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.