'சரண்டர் ஆனவர் ஏன் தப்பித்து ஓட வேண்டும். அதுவும் ஏன் காலை 5:30 மணிக்கு என்ன வேலை? கை விலங்கு இல்லை என்றால் என்ன காரணம்?' என ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என பாமகவின் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
விக்கிரவாண்டியில் செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ''தேர்தல் வாக்குறுதி கொடுத்தது ஒன்று. ஆனால் அரசு செய்வது ஒன்று. காவிரி தண்ணீர் பிரச்சனையை சரியான முறையில் தமிழக அரசு கையாளவில்லை. பிரச்சனை வரும் நேரத்தில் அப்பொழுதுதான் ஒரு கூட்டம் நடத்துவார்கள். நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தினார்கள். உச்சநீதிமன்றம் செல்வோம் என்று சொன்னார்கள். ஆனாலும் இயற்கை நமக்கு அங்கே கர்நாடகாவில் மழையை கொடுத்ததால் இன்று நாம் கேட்ட தண்ணீரை விட மூன்று மடங்கு அதிக தண்ணீர் காவிரியில் வந்து கொண்டிருக்கிறது. அடுத்த ஆறு மாதம் இதைப் பற்றி நாம் பேசப்போவது கிடையாது. அதற்கு பிறகு இந்த பிரச்சனை மீண்டும் வரும் பொழுது அனைத்து கட்சிக் கூட்டம் போடுவோம், உச்சநீதிமன்றம் போவோம். இதற்கு ஒரு நிரந்தர தீர்வுதான் என்ன?
அடுத்தது ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம். இந்த சட்டத்தை ரத்து செய்த பிறகு கிட்டத்தட்ட 30 பேர் தமிழகத்தில் தற்கொலை செய்துள்ளார்கள். அதை பற்றி திமுக அரசுக்கு கவலையே கிடையாது. உச்ச நீதிமன்றத்திற்கு சென்று சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை பெறுவதற்கு கூட திமுகவிற்கு மனசு கிடையாது. அவர்களுக்கு எல்லாமே வியாபாரம் வணிகம் தான். இதையெல்லாம் திமுக மக்களுக்கு செய்யும் துரோகங்கள். தமிழ்நாட்டினுடைய சட்ட ஒழுங்கு தினமும் ஒரு கொலை என்பதாக இருக்கிறது. மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகியை கொலை செய்துள்ளார்கள். பாமகவின் நிர்வாகி வெட்டி கொலை, அதற்கு முன்பு ஆம்ஸ்ட்ராங், அதற்கு முன்பு அதிமுக, அதற்கு முன்பு காங்கிரஸ் நிர்வாகி என ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட 100 பேருக்கு மேல் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவ்வளவு கொலை நடக்கிறது என்பதால் மக்கள் எல்லாம் அச்சத்தில் பயத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.
அது ஒரு பக்கம், அடுத்தப்பக்கம் கள்ளச்சாராயம் ஆறாக பெருகிக் கொண்டிருக்கிறது. கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவத்திற்கு பிறகு விழுப்புரம் மாவட்டத்தில் 11 பேர் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். முதலமைச்சர் என்ன நடவடிக்கை எடுக்கிறார். மரக்காணம் சம்பவத்தின் போது இரும்புக் கரம் கொண்டு வேரோடு அறுப்போம் என வசனம் பேசினார். கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கும் அதே வசனம் பேசினார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவரை என்கவுன்டரில் போட்டுள்ளார்கள். சரண்டர் ஆன பிறகு சரண்டர் ஆனவர் ஏன் தப்பித்து ஓட வேண்டும். அதுவும் ஏன் காலை 5:30 மணிக்கு என்ன வேலை? கை விலங்கு இல்லை என்றால் என்ன காரணம். அதனால் தான் சிபிஐ விசாரணை வேண்டும் என கேட்கிறோம். சிபிஐ விசாரணை வந்தால் தான் முழு உண்மை வெளியே வரும். ஏன் என்கவுன்டர் செய்தார்கள்; இதில் யார் யார் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பது வெளிவரும்'' என்றார்.