கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை ஜூலை முதல் வாரத்தில் தொடங்கி தற்போது வரை விட்டு விட்டு கனமழை பொழிந்து வருகிறது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான மைசூர், குடகு, ஹாசன் உள்ளிட்ட பகுதிகளிலும் கடலோர மற்றும் மலை மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பொழிவதால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி கர்நாடகாவின் முக்கிய அணைகளான கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் தொடர்ந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.
கர்நாடகாவில் இருந்து தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. 405 நாட்களுக்குப் பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. இதன் மூலம் வரலாற்றில் 71 வது முறையாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனைக் கொண்டாடும் வகையில் மலர் தூவி அதிகாரிகள் காவிரி நீரை வரவேற்றுள்ளனர்.
மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் அதனைத் தொடர்ந்த காவிரி பகுதிகளான நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆகிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காவிரி கரையோர பகுதிகளான ஜனதா நகர், மீனவர் தெரு, நாட்டார் கவுண்டன்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலைப்படி தமிழகத்தின் எல்லையான பிலிகுண்டுலுவிற்கு வரும் காவிரி நீரின் அளவு 1.30 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கலில் பாறைகள் தெரியாத அளவிற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அங்கு சுற்றுலாப் பயணிகளுக்கு 13 ஆவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.