தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள பின்னவாசல் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு தோட்டத்தின் அருகே ஒரு லாரியும் ஒரு சரக்கு மினி லாரியும் நீண்ட நேரம் நிற்பதை பார்த்து ஆடு திருடும் கும்பல் வந்திருப்பார்களோ என்று சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் அந்த இரு வாகனங்களையும் வாகன ஓட்டிகளையும் பிடித்து வைத்துக்கொண்டனர். பேராவூரணி போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் பல மணி நேரத்திற்கு பிறகு வந்த போலீசார் அவர்களிடம் விசாரணையைத் தொடங்கினர்.
விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் சொன்னதால் வாகனங்களை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று விசாரணை செய்த போது தாங்கள் ஆந்திராவில் இருந்து கொண்டு வந்த கஞ்சா பண்டல்களை பின்னவாசல் முத்துத்துரை மகன் சிதம்பரம் (48) வீட்டில் இறக்கிவிட்டு வந்ததாகக் கூற, அதிர்ச்சியடைந்த போலீசார் சிதம்பரம் வீட்டிற்குச் சென்று கஞ்சா பண்டல்களை மீட்டு சிதம்பரத்தையும் கைது செய்து அழைத்து வந்தனர்.
மேலும் விசாரிக்க, அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. கைப்பற்றி வந்த லாரியின் பிளாட்பாரத்தில் ஒரு ரகசிய அறை அமைத்து அதில் பல மூட்டை கஞ்சா பண்டல்கள் இருப்பது தெரிந்தது. இந்த தகவல் தஞ்சை மாவட்ட எஸ்பி ரவளி பிரியாவுக்கு கிடைக்க நேற்று இரவு வந்த எஸ்.பி டீம் அந்த பிளாட்பாரத்தை கழற்றிப் பார்த்த போது பண்டல் பண்டலாக கஞ்சா அள்ளப்பட்டது.
சுமார் 460 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய போலீசார் பலமணி நேரம் நடத்திய விசாரணையில் ஆந்திராவைச் சேர்ந்த ராம் பாபுவிடம் இருந்து திருச்சி குமார் ( பிறகு தேனி மாவட்டம் குமார் என்று கூறியுள்ளனர்) மொத்தமாக வாங்கி லாரியில் அனுப்புவார் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று சில்லறை வியாபாரிகளுக்கு கொடுப்பதும் தெரிய வந்தது.
இந்த கஞ்சா கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாக லாரி உரிமையாளரும் ஓனருமான தேனி மாவட்டம் உத்தமபாளையம் கருமாரியும், படையப்பா (24), பேராவூரணி பின்னவாசல் சிதம்பரம் (48), மதுரை திருமங்கலம் ஆலங்குளம் ரமேஷ்குமார் (39), பேராவூரணி பூக்கொல்லை எம்ஜிஆர் நகர் செல்வராஜ் (60), பேராவூரணி அண்ணாநகர் கணேசன் ஆகிய 5 பேரை கைது செய்த போலீசார் மேலும் ஆந்திரா மாநிலம் ராம்பாபு, தேனி மாவட்டம் குமார், பேராவூரணி அன்னக்கிளி, பூக்கொல்லை மங்கலம் ஆகிய நான்கு பேர் உட்பட 9 பேர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.