விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’ராஜீவ் கொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து விட்ட நிலையில் இனியும் காலம் தாழ்த்தாமல் அவர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை முடிவு செய்து அதை தமிழக ஆளுநருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமே அனுப்பி விட்டது. அதன்மீது கடந்த ஒன்பது மாதங்களாக முடிவு எதுவும் எடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வந்தார். அவர்களை விடுவிப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது என்பதைக் காரணமாக சிலர் கூறிவந்தனர்.
இன்று உச்ச நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது. 'இது தொடர்பாக ஆளுநர் முடிவு எடுப்பார்' என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் அந்த ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு ஆளுநர் உத்தரவிடவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
தமிழக மக்களின் உணர்வையும், தமக்குள்ள அதிகாரத்தையும் உணர்ந்து ஆளுநர் இதில் நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறோம்’’என்று தெரிவித்துள்ளார்.