நாகை மாவட்டத்தில் கடல் வழியாக நடைபெறும் கடத்தல் சம்பவங்களை தடுக்க 70 கடலோர பாதுகாப்பு குழும தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் கடற்கரை வழியாக நடைபெறும் கடத்தல் சம்பவங்களை தடுக்கும் விதமாக கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சார்பாக தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்ட மீனவ கிராமங்களிலிருந்து கடலோர பாதுகாப்பு குழுமத்தின் சார்பாக 70 தன்னார்வலர்கள் (Marine volunteer) தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடலோர ரோந்து பணி, தீவிரவாத ஊடுருவல், கள்ளக்கடத்தல், கடற்கரை விழாக்களில் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளில் தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளதாக கடலோர காவல் குழும போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகை, வேளாங்கண்ணி, தரங்கம்பாடி, பூம்புகார் உள்ளிட்ட 7 கடலோர காவல் நிலையங்களில் உள்ள மீனவ கிராமங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 70 தன்னார்வலர்களுக்கு சீருடை மற்றும் அடையாள அட்டைகளை நாகை கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் ராஜா வழங்கினார்.