
தமிழக வனத்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி கடந்த ஞாயிற்றுகிழமை நடந்த கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியவர், பெண்கள் குறித்தும், சைவ - வைனவ சமயம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில் பலரும் எதிர்வினையாற்றி வந்தனர்.
சொந்த கட்சியான திமுகவிலே கண்டன குரல்கள் எழுந்தது. திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி, 'அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது' என தனது எதிர்பை பதிவு செய்திருந்தார்.தொடர்ந்து திமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டது திருச்சி சிவா திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருந்தார். இதனை தொடர்ந்து, அமைச்சர் பொன்முடி தன்னுடைய பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். தலைகுனியும் சூழல் ஏற்பட்டுவிட்டது குறித்து வருந்துவதாகவும், மனம் புண்பட்ட அனைவரிடமும் நான் பேசிய பேச்சுக்கு மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து அமைச்சர் பொன்முடியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் ‘கல்வி கூட்டமைப்புகளின் கம்பர்’ என்ற தலைப்பில் மாநில அளவிலான பேச்சுப் போட்டியின் நிறைவு பரிசு விழா இன்று (12-04-25) நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று உரையாற்றினார்.
அதில் பேசிய அவர், “கம்பராமாயணத்தில் பெண்களை போற்றி இருக்கிறார்கள். ஆனால், இப்போது கம்பன் காட்டிய பாதையை அழிக்கிறார்கள். சனாதன தர்மத்தை மலேரியா, கொசுவுடன் ஒப்பிட்டு பேசுகிறார்கள். இப்படி பேசுவது என்பது கலாச்சார இனப்படுகொலை தான். ஆளுங்கட்சியில் ஓர் உயர் பதவியில் இருக்கும் அமைச்சர், பெண்கள் குறித்து தரக்குறைவாகப் பேசுகிறார். பெண்களை மட்டுமின்றி, சிவன் மற்றும் விஷ்ணுவை வணங்குபவர்களின் நம்பிக்கையை அவமதித்து பேசுகிறார். சர்ச்சையாக பேசியவர் தனிநபர் மட்டுமல்ல; இங்குள்ள சூழல் அமைப்பில் உள்ள ஒரு புள்ளிதான்” எனத் தெரிவித்துள்ளார்.