Skip to main content

20 அடி சுவர் இடிந்து 17 பேர் பலியான வழக்கு!- நில உரிமையாளரை எதிர் மனுதாரராகச் சேர்க்க உத்தரவு!

Published on 12/12/2019 | Edited on 12/12/2019

மேட்டுப்பாளையத்தில் 20 அடி சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியான சம்பவம் தொடர்பான வழக்கில் நில உரிமையாளரை எதிர் மனுதாரராக சேர்க்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

கடந்த 2-ஆம் தேதி மேட்டுப்பாளையத்தில் 20 அடி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் பட்டியலினத்தைச்  சேர்ந்த 17 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தையடுத்து சுற்றுச்சுவர் எழுப்பிய நில உரிமையாளர் சிவசுப்பிரமணியம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், விதிகளை மீறி பாதுகாப்பற்ற முறையில் 20 அடி உயரத்திற்கு சுற்றுச்சுவர் எழுப்ப அனுமதித்த அரசு அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச்செயலாளர் சாமுவேல் ராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

COIMBATORE METTUPALAYAM HOMES COLLAPSED BUILDING OWNER  CHENNAI HIGH COURT


இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மாநிலம் முழுவதும் உள்ள தீண்டாமைச் சுவர்களைக் கண்டறிந்து அகற்ற வேண்டும் என்றும், பலியான குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவுகளுக்கு கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.


இதனைக் கேட்ட நீதிபதிகள், தீண்டாமைச் சுவர் என்று கூறப்படும் அந்தச் சுற்றுச்சுவர் பட்டா நிலத்தில் கட்டப்பட்டதா என்றும், சுற்றுச்சுவர்  கட்டப்பட்ட போது குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் எழுப்பக் கூடாது என விதிகள் ஏதும் இருந்தனவா? எனவும் கேள்வி எழுப்பினர். மேலும், இந்த வழக்கில் நில உரிமையாளர் சிவசுப்பிரமணியம் மற்றும் அரசு அதிகாரிகளை எதிர் மனுதாரராக சேர்க்க மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஜனவரி 24- ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.



 

சார்ந்த செய்திகள்