கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 2,248 பேருக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று 1,990 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளியானது, 166 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரவீன் குமாரும் ஒருவர்.
மேலும் சென்னை, கள்ளக்குறிச்சி, வேலூர், பெங்களூர், கத்தார் நாட்டில் இருந்து வந்தவர்கள் மற்றும் கடலூரை சேர்ந்த மூன்று கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 166 பேர்களுக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நெல்லிக்குப்பத்தை சேர்ந்த டாக்டர் ஒருவருக்கு கடந்த 21ஆம் தேதி கரோனா உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அவர் மனைவிக்கும் நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டு அவர்கள் இருவரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அங்கு டாக்டருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது, ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
திட்டக்குடி அருகில் உள்ள மா.புடையூர் கிராமத்தை சேர்ந்த 53 வயது ஆண் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல், திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி 24ஆம் தேதி உயிரிழந்துள்ளார். இதன்மூலம் கடலூர் மாவட்டத்தில் கரோனா நோய் பரவலின் காரணமாக இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று வரை 1,587 பேர்கள் குணமடைந்து அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 675 பேர் கடலூர் அரசு மருத்துவமனையிலும், 127 பேர் வெளிமாவட்ட மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 43,700 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 2,412 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் இன்னும் 1,995 பேர்களின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது. மேலும் தற்போது சில நாட்களாக மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகா முரி உத்தரவின்பேரில், சுகாதாரத் துறையினர் தலைமையில் தன்னார்வலர்கள், சுய உதவிக்குழு பெண்கள் ஆகியோர் வீடு வீடாக சென்று ஆரம்பகட்ட நேரடி பரிசோதனைகள் செய்து வருகின்றனர்.