கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவியின் ஜாமின் மனு மீதான விசாரணையை வரும் 5ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கு விசாரணைக்கு பேராசிரியை நிர்மலாதேவி ஆஜராகாததால் அவரது ஜாமீனை ரத்து செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது. பின்னர் நிர்மலாதேவியை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியர் நிர்மலாதேவி மற்றும் ஜாமீனில் வெளியே வந்துள்ள உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் ஆஜராயினர்.
மதியம் ஒரு மணி அளவில் நிர்மலாதேவி ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் 3 மணி அளவில் விசாரணை தொடங்கியது.
விசாரணை நடைபெற்ற போது, நிர்மலாதேவியின் ஜாமீன் மனுவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரிமளா வரும் 5ம் தேதி 3 பேரும் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
வரும் 5ம் தேதி நிர்மலாதேவியின் ஜாமின் மனு மீதான விசாரணை உள்ளிட்ட முக்கிய மனுக்கள் மீதான விசாரணை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.