நீலகிரி மாவட்டத்தில் வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் சொல்லில் அடங்காதவை. நீலகிரி மலையில் ஆங்காங்கே வீடுகளை அமைத்துக் கொண்டு வாழ்ந்து வந்த மக்கள் இன்று வாழ வீடுகள் இல்லை. மறுபடியும் குடிசை அமைக்க கூட அந்த இடங்களும் இல்லை என கூறுகின்றனர். பலரும் மண் சரிவுகளில் சிக்கி காணாமல் போய் இருக்கிறார்கள். இவர்களுக்கு உதவிகள் செய்ய தன்னார்வலர்கள் சென்றாலும் அவர்களை வழிகாட்டி அழைத்துச் செல்ல உள்ளூர் இளைஞர்கள் பலரும் குழுவாக செயல்பட்டு மக்களுக்கு தேவையானதை செய்து வருகிறார்கள். இப்படி ஒவ்வொரு நிகழ்வுகளையும் நக்கீரன் இணையத்தில் செய்திகளாக வெளியிட்டு வரும் நிலையில், ஒவ்வொரு செய்தியின் இறுதியிலும் உதவிக்கு செல்வோர் தொடர்புகள் கொள்ள வசதியாக தொடர்பு எண்களையும் கொடுத்திருந்தோம்.
அதில் ஆனந்த என்பவரின் எண்ணில் தொடர்பு கொண்ட சேலம் மருத்துவர்கள் மணி, மணிகண்டன், சங்கர், கௌதம் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று மாலை ஊட்டிக்கு சென்றுள்ளனர். அவர்களுக்கு ஜெயப்பிரகாஷ் என்ற உள்ளூர் இளைஞர் வழிகாட்டியாக, அவர்களுடன் பயணித்தார். ஊட்டி எமரால்டு பகுதியில் உள்ள பல மலை கிராமங்களில் வாழ்ந்த சுமார் 500 குடும்பங்களுக்கு உணவு உள்ளிட்ட எந்த உதவியும், இதுவரை கிடைக்கவில்லை. அவர்கள் தங்கும் முகாம்களிலும் எந்த உதவியும் கிடைக்கவில்லை என்பதால் இடிந்து கிடக்கும் வீடுகளை நோக்கி சென்றுவிட்டனர். இதில் எட்வர்டு இந்திராநகர் பகுதியில் சுமார் 100 குடும்பங்கள் இருந்துள்ளனர். அந்த பகுதி முழுவதும் மண் சரிவால் வீடுகளை காணவில்லை. அவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்பதை அறிந்து நக்கீரன் வாசகர்களான சேலம் மருத்துவக்குழு நண்பர்கள் சிறு சிறு உதவிகளை செய்துள்ளனர்.
அதே போல பல கிராமங்களுக்கு சென்று உதவியவர்கள் அங்குள்ள அவல நிலைமைகளை நம்மிடம் விவரித்தனர். நக்கீரன் இணைய செய்தியில் கொடுக்கப்பட்டிருந்த ஆனந்த் எண்ணை தொடர்பு கொண்டு பேசிவிட்டு உணவு பொருள்கள் தவிர்த்து பேட் உள்ளிட்ட பல பொருட்களை எங்கள் குழுவினர் கொண்டு வந்தோம். எங்களை ஜெயப்பிரகாஷ் என்ற இளைஞர் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு அழைத்துச் சென்றார். அனைத்து இடங்களிலும் போக்குவரத்துக்கான சாலைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. பாரதி நகர், இந்திரா நகர், அண்ணாநகர், கொத்தேரி உள்ளிட்ட 20- க்கும் மேற்பட்ட கிராமங்களில் பெரிய அளவில் மண் சரிவு ஏற்பட்டு பல வீடுகளையே காணவில்லை. அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு உணவு, குடிதண்ணீர் கூட கிடைக்கவில்லை.
மருத்துவ உதவியும் கிடைக்காமல் சளி, காய்ச்சலால் ரொம்பவே அவதிப்பட்டு வருகிறார்கள். நாங்கள் பார்த்த கொத்தேரியில 20 குடும்பங்கள் இருந்திருக்கிறார்கள் ஆனால் இப்ப அந்த இடம் முழுமையாக மண் சரிந்து வீடுகள் இருந்த தடயமே இல்லை. அப்படித் தான் இதனை ஒட்டியுள்ள பல கிராமங்கள் உள்ளது, இன்னும் பல கிராமங்களுக்கு நடந்தோ அல்லது வான்வழியாகவோ தான் அவர்களுக்கான உதவிகளை செய்ய முடியும். அதனால் யாரும் அந்த பகுதிகளுக்கு போக முன்வரவில்லை. அதனால் அந்த மக்கள் இன்று வரை சாப்பாட்டுக்கும், தண்ணீருக்கும் தடுமாறும் நிலை உள்ளதாக சொல்கிறார்கள்.
இந்திரா நகரில் ஒரு இடத்தில் தண்ணீர் ஆழ்துளை நிலப்பகுதிக்கு போகிறது. ஆனால் எந்த இடத்திலும் தண்ணீர் வெளியே வரவில்லை என்பதால், பெரிய ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சத்திலும் மக்கள் உள்ளனர் என்றனர். அங்குள்ள மக்களோ.. எங்களை முகாம்களுக்கு அழைத்தார்கள் அங்கேயும் எதுவும் கிடைக்கவில்லை. அதனால் ஊருக்குள் வந்து ஒன்றிரண்டு வீடுகளில் தஞ்சமடைந்திருக்கிறோம். அடுத்த வேலை உணவுக்காக காத்திருக்கிறோம் என்கின்றனர்.
அவரசமாக உதவிகள் செய்யவும், நீலகிரி மக்களுக்கு உதவி செய்ய செல்வோருக்கு வழிகாட்டவும் ஆனந்த் – 9527119747, பிரகாஷ் – 9698559559, 9344044969 எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.