கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வெள்ளூர் வல்லடிகாரர் ஊரில் உள்ள கோயிலுக்குள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இது குறித்து மேலூர் தேர்தல் அதிகாரியும், தாசில்தாருமான காளிமுத்து என்பவர் ஒளிப்பதிவாளர் உடன் சென்று பணப்பட்டுவாடா செய்ததை வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் தாசில்தார் காளிமுத்துவை தாக்கியதாக மு.க.அழகிரிக்கு எதிராக தாசில்தார் காளிமுத்து தரப்பில் கீழவளவு காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் மு.க.அழகிரி, மதுரையின் துணை மேயராக இருந்த மன்னன், திமுக நிர்வாகிகளான ரகுபதி, திருஞானம், ஒத்தப்பட்டி செந்தில், பொன்னம்பலம், தமிழரசன், நீதித்தேவன், சேகர், மயில்வாகனன், ராகவன், ராமலிங்கம், சோலை நாகராஜா, வெள்ளையா பாலகிருஷ்ணன், அய்யனார், கருப்பண்ணன், பாலு, போஸ் உட்பட 21 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கு விசாரணை மேலூர் நீதிமன்றத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு தொடரப்பட்டு 2019 ஆம் ஆண்டு வரை நடைபெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இதனையடுத்து வழக்கு விசாரணையின் போது சாட்சிய விசாரணை, அரசுத் தரப்பு வாதங்கள், எதிர்த்தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றன. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.